நான் நடிகை நயன்தாராவை பற்றி தவறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை என தன் மீதான சர்ச்சைக்கு நடிகை மாளவிகா மோகனன் விளக்கமளித்துள்ளார். 


ஒரு நேர்காணல் ஒன்றில், நடிகை மாளவிகா மோகனனிடம் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற லாஜிக்கே இல்லாத சீன்கள் பற்றி சொல்லுங்க என நெறியாளர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அவர், குறிப்பிட்ட ஒரு படத்தில் இடம் பெற்ற காட்சியை விளக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படம் வெளியாகியிருந்தது. அப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா, தன் மீதான சில விமர்சனங்கள் குறித்தும் பேசினார். 






அப்போது, “ஹீரோயின் ஒருவர் நேர்காணலின் போது மருத்துவமனையில் இருப்பதுபோன்ற ஒரு காட்சியில் நன்றாக மேக் அப் போட்டு கொண்டு முடியை நேர்த்தியாக வைத்து நடித்துள்ளேன் என விமர்சித்துள்ளார். அவர் எனது பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் என்னை தான் சொல்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. மருத்துவமனை சீனில் நடிக்கும்போது முடியை விரிச்சு போட்டுக்கிட்டா நடிக்க முடியும். இயக்குநர்கள் என்ன எதிர்பார்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டும்” என நயன்தாரா சரமாரியாக பதிலளித்தார். 






இதையடுத்து நயன்தாரா நடிகை மாளவிகா மோகனனை தான் சொல்கிறார் என்று புதிய பிரச்சினை கிளம்பியது. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.


இதற்கிடையில்,மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக மலையாள சேனல் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அப்போது தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தார். நடிகைகளை பாலினம் கருதாமல் சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம் என்றும் கூறினார். 


மேலும் தீபிகா படுகோன், ஆலியா பட் போன்றோரும் சூப்பர் ஸ்டார்கள் தான் என மாளவிகா கூற, தமிழ் சினிமாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” ஆக கொண்டாடப்படும் நயன்தாராவின் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.


இந்நிலையில், “ லேடி சூப்பர்ஸ்டார் பற்றிய எனது கருத்து பெண் நடிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பாலின சொல்லைப் பற்றியது மட்டுமே. நான்  எந்த குறிப்பிட்ட நடிகையை பற்றியும் பேசவில்லை. நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன், அவரது நடிப்பைப் பாராட்டுகிறேன், மேலும் ஒரு சீனியராக அவரது நம்பமுடியாத பயணத்தை நான் கண்டு வியக்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள்” என மாளவிகா மோகனன் டென்ஷனாகி பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.