திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 


பாலிவுட்டில் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவராக அறியப்படும் ராக்கி சாவந்த் 1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2009 ஆம் ஆண்டு  ‘சுயம்வரம்’ நிகழ்ச்சி மூலம் ஓவர்நைட்டில் பிரபலமானார். ஆனால் அதில் தேர்வு செய்யப்பட்டவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. 


மாறாக 2019 ஆம் ஆண்டு ரித்தேஷ் சிங் எனும் வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார். இவர்களின் திருமண பந்தம் 2022 ஆம் ஆண்டில் முறிந்தது. இதன் பின்னர் கடந்த மாதம் அடில் துரானி என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். சில வாரங்களுக்கு முன் ராக்கி சாவந்த் அம்மா ஜெயா பேடா கேன்சரால் உயிரிழந்த நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது இந்த திருமணம் நடந்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 


ஆனாலும்  ராக்கி சாவந்த் மீதான சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன், அடில் என்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார். வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும்  ஆசிட் அடித்துவிடுவேன் என மிரட்டியதாகவும் போலீசில் புகாரளித்தார். மேலும் தன் கணவர் தன்னை  நிர்வாண வீடியோக்களை எடுத்து விற்றுள்ளதாகவும்,  மற்றொரு நபரை மூன்றாவது முறையாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோரினார் என்றும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதனடிப்படையில்  அடில் துரானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்நிலையில் அடில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீசில் ஈரான் நாட்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகாரில், நான் மைசூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறேன். எனக்கும் அடில் துரானிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி என்னிடம் பாலியல் உறவு கொண்டுள்ளார். 


ஆனால் அதன்பிறகு என்னுடன் பழகுவதை நிறுத்திய அடில் துரானி என்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, திருமணம் செய்ய வலியுறுத்தினால் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார் என தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அடில் துரானி மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.