எஸ். எஸ். பாலன் இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் - நடிகை லதா நடிப்பில் 1974ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சிரித்து வாழ வேண்டும்'. இப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சரத்குமார், மயில்சாமி, நடிகை லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புரட்சி தலைவர் பற்றி பேசினர். 


 



 


நெகிழ்ச்சியில் பேசிய லதா :


'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை லதா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளை பகிர்ந்தார். அவர் பேசுகையில் "நான் சினிமாவில் நுழைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. 50வது ஆண்டில் நான் நடித்த படம் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் செய்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஒரு கல்லாக இருந்த என்னை ஒரு சிற்பமாய் செதுக்கியவர் எம்.ஜி.ஆர் தான். நான் இன்றும் நடித்து கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கும் காரணம் அவர் தான். நான் சினிமாவுக்கு வந்த போது 14 வயது அதனால் எனக்கு அனைத்தையும் கற்று தந்தவர் எம்.ஜி.ஆர். தான் என்பதை நான் இன்றளவும் மறக்கவில்லை.


உலகம் முழுவதிலும் இருக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள், வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். என்னால் முடிந்த உதவிகளை நான் இன்றும் செய்து வருகிறேன். நான் இன்று அனைவருடனும் அன்பாக பழகுவதற்கு காரணம் அவர் தான். அனைவரிடத்திலும் அன்பாக பழக வேண்டும், மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், அதிகமாக பேசக் கூடாது, நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என நிறைய அறிவுரைகளை கூறியுள்ளார். அவரின் கொள்கைகளை ஃபாலோ செய்தால் இந்த தலைமுறை வேற லெவலுக்கு சென்றுவிடும். அவருடைய படங்களை ரீ  ரிலீஸ் செய்து வெளியிடுவதால் இந்த சமுதாயம் முன்னேற்ற பாதையில் செல்லும்.  எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையாக யாருமே கிடையாது. ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன் என்பது போல ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்" என மிகவும் அனந்தத்துடனும் பூரிப்புடனும் பேசினார் நடிகை லதா. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், மயில்சாமி மற்றும் பலரும் எம்.ஜி.ஆர் பற்றி பல தகவல்களை பகிர்ந்தனர். 


 






 


எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாட்டம் : 


நீண்ட காலத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் படங்களை திரையரங்குகளில் வெளியாவதால் எம்.ஜி. ஆர் ரசிகர்கள் இந்த ரீ ரிலீஸ் படங்களை கொண்டாடுகிறார்கள். சிரித்து வாழ வேண்டும் திரைப்படம் போலவே எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அடிமை பெண், ரிக்க்ஷாகாரன் மற்றும் பல படங்கள் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடினர்.