நடிகர் கார்த்திக் உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக நாங்கள் பல ஆண்டுகள் பேசாமல் இருந்தோம் என நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பூ. ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு பிரபலமடைந்த அவர், தற்போது பாஜகவில் முன்னணி நிர்வாகியாகவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் சினிமா, அரசியல் என தொடர்ந்து பயணித்து வரும் குஷ்பூ, நேர்காணல் ஒன்றில் நடிகர் கார்த்திக் உடனான நட்பு குறித்தும், தங்களுக்குள் ஏற்பட்ட சண்டை குறித்து பேசியிருப்பார்.
அதில், “வருஷம் 16 படத்துக்கு நான் முதலில் தேர்வாகவில்லை. இயக்குநர் பாசில் தான் புதுப்பெண் இருந்தால் அந்த ராதிகா கேரக்டருக்கு நன்றாக இருக்கும் என நினைத்திருந்தார். அப்போது அவருக்கு நெருக்கமான மேக்கப் மேன் எனக்கு மேக்கப்மேனாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் தான் என்னை பாசிலிடம் கூட்டிச் சென்றார். என்னை விதவிதமாக ஆடை அணிந்து ஒவ்வொரு நாளும் வரசொன்னார். எனக்கு ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால் அந்த மேக்கப்மேன் என்னை சமாதானம் செய்து வரவைத்தார். பாசில் அந்த படத்தில் என்னை ஓகே செய்த பிறகு யாரிடமும் இந்த படத்தில் நடிக்கிறேன் என சொல்லி விடாதீர்கள் என தெரிவித்தார்.
அப்போது தமிழில் பாசில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். கார்த்திக்கும் முன்னணி நடிகராக இருந்தார். நான் வந்து நாகர்கோவிலில் ஷூட் போற வரைக்கும் எனக்கு படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கையில்லை. வருஷம் 16 படம் 1988 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்த 2 ஆண்டுகள் நாங்கள் இணைந்து நடிக்கவில்லை. எங்களுக்குள் மிகப்பெரிய சண்டை நடந்தது. என்னவென்று தெரியவில்லை, நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை. யாராவது கார்த்திக் ஹீரோ என சொல்லி படம் பண்ண வந்தால் நடிக்க மாட்டேன் என சொல்லிடுவேன். கார்த்திக்கும் நான் என்றால் வேறு ஹீரோயினை பாருங்க என சொல்வார்.
ஆனால் அதன்பிறகு நாங்கள் இருவரும் இணைந்து கிழக்கு வாசல், விக்னேஷ்வர் படங்கள் செய்தோம். கிழக்கு வாசல் படம் ஷூட்டிங் தேனியில் நடந்தது. அப்போது என்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். கார்த்திக் தான் அந்த பையனை அடி அடியென அடித்து போலீஸில் பிடித்து கொடுத்தார். அப்போதும் என்னிடம் பேசமாட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின் விக்னேஷ்வர் படத்தில் இணைந்து நடித்தோம். அதன்பின் எங்கள் நட்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்தது" என குஷ்பூ தெரிவித்திருப்பார்.
மேலும் படிக்க: Gautham Vasudev Menon: இந்தி படமே வேண்டாம்.. ஓடி வந்த கௌதம் மேனன்.. என்ன காரணம்?