இந்தியில் படம் பண்ணுவது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம் என நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் கௌதம் மேனன். இதனைத் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு, எனை நோக்கி பாயும் தோட்டா, ஜோஸ்வா இமைபோல் காக்க என பல படங்களை இயக்கியுள்ளார். 

இப்படியான நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில், தனக்கு இந்தி படங்கள் பண்ணுவதில் விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார். அதில் பேசிய கௌதம் மேனன், “இந்தியில் படம் பண்ணுவது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம். எனக்கு பிடிக்கவே இல்லை. ஓடி வந்துட்டேன்னு தான் சொல்லணும். அதனால் தான் என்னை காக்க காக்க படம் இந்தியில் பண்ண சொல்லும்போது பயந்துகிட்டு வேண்டாம் என சொன்னேன். ஏனென்றால் படம் நம்ம கண்ட்ரோலில் இருக்காது. எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து எடுத்துருவாங்க. பெரிய தயாரிப்பாளர், ஜான் ஆபிரஹாம் ஹீரோ, நல்ல வாய்ப்பு என எல்லாம் இருந்தும் நான் பண்ணல. ஆனால் காக்க காக்க படத்தின் ஈர்ப்பில் இருந்து எடுக்கப்பட்ட படம் என நன்றி தெரிவித்திருந்தார்கள். 

Continues below advertisement

எனக்கு காமெடி என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லா படமும் எடுத்து பார்த்தால் காட்சிகளில் ஒரு சிரிப்பு இருக்கும். நான் ஒரு படத்தை 65 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை எடுத்துக் கொள்வேன். என்னுடைய படங்களில் அதிக நாட்கள் எடுத்த படம் வாரணம் ஆயிரம் தான். அதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்ததால் தாமதமாகி விட்டது” என தெரிவித்துள்ளார். 

கௌதம் மேனன் 2001 ல் தனது மின்னலே படத்தை Rehnaa Hai Terre Dil Mein என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக காக்க காக்க படத்தை எடுக்க மாட்டேன் என மறுத்துள்ளார். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தமிழில் தான் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை  Ekk Deewana Tha என்ற பெயரில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.