சினிமாவில் நான் இன்னும் ஓடிக்கொண்டிருக்க “சின்ன தம்பி” படம் தான் காரணம் என நேர்கானல் ஒன்றில் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். 


1992 ஆம் ஆண்டு  பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, ராதாரவி, மனோரமா, கவுண்டமணி, சுலக்‌ஷனா, பாண்டு உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சின்னத்தம்பி”. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் பிரபுவுக்கும், குஷ்பூவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் பிரபுவின் சின்ன வயது கேரக்டரில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி நடித்திருந்தா.ர்  பி. வாசு, நடிகர் பிரபு இருவரும் என் தங்கச்சி படிச்சவ,  பிள்ளைக்காக  ஆகிய படங்களை தொடர்ந்து இணைந்த 3வது படமாகும்.


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை குஷ்பூ, “ சின்னதம்பி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். அதன்பிறகு குஷ்பு சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கவே இல்லை. இன்று வரை சினிமாவில் வண்டி ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் சின்னதம்பி படம் தான். அப்படம் ஆரம்பித்தபோது பெரிய அளவில் ஹிட் ஆகும் என நினைக்கவில்லை. எனக்கு இவ்வளவு பேர் வருமுன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனக்கு கோயில் கட்டுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.


சொல்லப்போனால், அந்த படத்துக்கு நான் முதலில் தேர்வாகவில்லை. வேறு யாரோ பண்ண வேண்டியதாக இருந்தது. அவர்களால் பண்ண முடியவில்லை. பி.வாசு என்னோட ஏதோ ஒரு தமிழ் படம் பார்த்து விட்டு தான் சின்னதம்பி படத்துக்காக என்னை அணுகிறார். நான் அதற்கு வருஷம் 16 எல்லாம் நடித்து முடித்து விட்டேன். அப்போது எனக்கு கிளாமர் கேர்ள் என்ற பெயர் இருந்தது. ஆனால் பி.வாசு என்னோட படம் பார்த்து விட்டு சின்னதம்பி படத்தில் வாய்ப்பு கொடுத்தால் நான் நன்றாக நடிப்பேன் என நினைத்தார். அவர் தயாரிப்பாளரிடம் சண்டை போட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்” என தெரிவித்துள்ளார். 


அந்த படம் வெளியாகி கடந்த மாதம் 33 ஆண்டுகள் நிறைவடைந்தது. அப்போது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட குஷ்பூ, “சின்னதம்பி படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு. எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றிய படம் இது. உங்கள் ஒவ்வொருவரின் அன்புக்கும் நன்றி. இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ரவீந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட அனைவரும் நன்றி. தலை வணங்குகிறேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.