கே.ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகர் யஷ். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது 18 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கீது மோகன் தாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு டாக்ஸிக் (Toxic Movie) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் கீது மோகன் தாஸ்


தமிழ் சினிமாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமான நடிகையான கீது மோகன்தாஸ் குழந்தை நட்சத்திரமாக சத்யராஜ் - சுஹாசினி நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . தொடர்ந்து நடிகர் மாதவன் உடன் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹீரோயினாக கீது மோகன்தாஸ் நடித்துள்ளார்.


பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள கீது மோகன் தாஸ், 'லையர்ஸ் டைஸ்' என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்ற இவர், முன்னதாக நிவின் பாலியை வைத்து இயக்கிய மூதோன் திரைப்படத்துக்காக பெரும் பாராட்டுகளைக் குவித்தார். இந்நிலையில், தற்போது கீது மோகன் தாஸ் யஷ் உடன் முதன்முதலாகக் கைகோர்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.


“என்னுடைய இரண்டு படங்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்றன, ஆனால் என்னுடைய சொந்த ஊரில் மக்கள் ரசிக்கும் வகையிலான ஒரு படத்தை நான் எடுக்க ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”  என்று முன்னதாக கீது மோகன்தாஸ் பேசியிருந்தார்.


யஷ் உடன் இணையும் கரீனா கபூர்






முன்னதாக இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


பாலிவுட் சினிமாவின் பெபோ என்று அழைக்கப்படும் கரீனா கபூர் முதல் முறையாக யஷுடன் இணைந்து நடிக்க இருப்பதை எதிர்பார்த்து யஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். அதே நேரத்தில் தனது முந்தைய இரண்டு படங்களில் தீவிரமான கதைகள் பெரும்பாலும் அறிமுக நடிகர்களுடன் படத்தை இயக்கிய கீது மோகன்தாஸ் இந்த முறை பான் இந்திய ஸ்டார் ஒருவருடன் இணைந்து எந்த மாதிரியான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.




மேலும் படிக்க: Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப் போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா