மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர், பொதுமக்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. விஜயகாந்த் மறைவின் போது முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும், ஷூட்டிங்கிற்காகவும் வெளிநாடு சென்றிருந்தனர். இதனால் அவரின் இறுதிச்சடங்கின் போது பங்குபெறாத நிலை ஏற்பட்டது. 


அதில் நடிகர் சூர்யாவும் ஒருவர். ஆனால் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை திரும்பிய சூர்யா, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்தார். தொடர்ந்து கற்பூரம் காட்டி மாலை அணிவித்து கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆரம்ப காலகட்டத்துல எனக்கு ஒரு 4,5 படங்கள் வெளியாகி பெரிய பாராட்டு எல்லாம் கிடைக்கவில்லை. பெரியண்ணா என்ற படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. . கிட்டதட்ட 8 முதல் 10 நாட்கள் வரை இணைந்து பணியாற்றினோம்.


ஒவ்வொரு நாளுமே சகோதர அன்போடு தான் பழகினார். முதல் நாளிலேயே ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூப்பிட்டார். அப்போது நான் எங்க அப்பாவுக்காக வேண்டிகிட்டு 8 வருஷம் அசைவம் சாப்பிடாமல் இருந்ததை சொன்னேன். அதைக் கேட்டு என்னை உரிமையாக  திட்டிவிட்டு, அவரின் தட்டில் இருந்து எடுத்து ஊட்டி விட்டார். நீ நடிக்கிற உனக்கு உடம்புல சக்தி வேணும். நீ வேற எதாவது வேண்டுதல் வச்சிக்கன்னு சொல்லிட்டு கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார். ஒவ்வொரு நாளும் என்னை அப்படி பார்த்துகிட்டார். டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர் கிட்ட எனக்கு தேவையான விஷயங்களை விஜயகாந்த் சொல்வார்.


அந்த ஷூட்டிங் நாட்களில் அவரை நான் பிரமிச்சு தான் பார்த்தேன். உச்ச நட்சத்திரம் என்பதை வெளிக்காட்டாமல் அவரை எளிதாக அணுகும்படி வைத்து கொள்வார். கார்கில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, மலேசியா, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி பண்ணது என விஜயகாந்தின் துணிச்சலை கண்டு அசந்து தான் போயிருக்கேன். அவரை சந்தித்து,அதிகமாக உட்கார்ந்து பேச முடியாமல் போய் விட்டது என்ற வருத்தம் உள்ளது.


அவரை மாதிரி இன்னொருத்தர்  கிடையாது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறேன்.விஜயகாந்துக்கு பொதுவெளியில் சிலை, மணிமண்டபம், நடிகர் சங்க கட்டடத்துக்கு அவரது பெயர் சூட்டுதல் என எல்லா விவகாரங்களிலும் எல்லாரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறார்களோ அது எனக்கு சந்தோசம் தான். நடிகர் சங்கத்தை மீட்டத்தில் விஜயகாந்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. அவருக்கான மரியாதையை நிச்சயமா செய்யணும்” என தெரிவித்தார். 


முன்னதாக நேற்றைய தினம் சூர்யாவின் அப்பா சிவகுமார், சகோதரர் கார்த்தி இருவரும் தனியாக வந்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.