இமாச்சல பிரதேசத்தில் மண்டி மக்களவைத் தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பாக களமிறங்க இருக்கிறார்.


மக்களவை தேர்தல் 2024


2024ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்ளிட்ட 102 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் நடிகர் விஜய், நடிகர் அஜித் குமார், கமல்ஹாசன், கார்த்தி, விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சிம்பு, சூர்யா, சித்தார்த், வடிவேலு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என தமிழ் சினிமாவின் அனைத்து  நடிகர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். 


கடந்த ஆண்டைப் போலவே மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது . ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்டமாக வரும் ஏப்ரல் 26ஆம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 


கங்கனா ரனாவத்


மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களராக இந்த முறை கவனமீர்த்துள்ளவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தாம் தும் படத்தின் வழியாக தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத் பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர். கடந்த ஆண்டு தமிழில் வெளியான சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத் நடித்தார். பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்ச்சியாக தனது ஆதரவை தெரிவித்து வருபவர் கங்கனா ரனாவத். மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர். தற்போது பாஜக சார்பாக அரசியலில் களமிறங்கியுள்ளார் கங்கனா ரனாவத்.  இமாச்சல பிரதேசத்தில் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார் கங்கனா ரனாவத். 






தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “ ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும். பிரகாசமான ஒரு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது வாக்கை செலுத்த வேண்டும்“ என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.