பதினெட்டாவது மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனிடையே இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வர இயலாத 85 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களின் இல்லத்திற்கே சென்று தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் வாக்குப்பதிவு நாளான நகர்ப்புறங்களில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன. கிராமப்புறங்களில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.




இந்நிலையில் கோவை மக்களவை தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற 104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்தார். கோவை மாவட்டம் கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி கவுண்டர். விவசாயியான இவர் தனது 104 வது வயதில் மகள், பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து கோவை மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக வீட்டில் இருந்து காரில் வந்த கணபதி வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கணபதி கூறுகையில் தான் 21 வயதில் இருந்து வாக்களித்து வருவதாகவும், இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க தவறியது இல்லை எனவும் கூறினார். வெளியூரில் இருக்க வேண்டி வந்தாலும் வாக்குப்பதிவு அன்று வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், அனைவரும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்த இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.