முன்னணி நடிகை ஜோதிகா:


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா மலையாள ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன் முதலில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து ஜோதிகா நடித்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. தன்பாலின கணவனுக்கு விவாகரத்து கொடுக்கும் ரோலில் நடித்த ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஜோதிகா அளித்துள்ள நேர்காணலில், தமிழ் சினிமா குறித்து பலவற்றை பகிர்ந்து கொண்டார். 



அதில், “கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவுக்கு வந்த புது இயக்குநர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். ஆனால், மிகப்பெரிய இயக்குநர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தை மட்டுமே எடுக்கின்றனர். இந்தி, மலையாளம் சினிமாக்களில் பெரிய இயக்குநர்கள் பெண்களை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளனர். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை.

கேவலமாக உள்ளது:


இதனால் சினிமாவில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் 10 மடங்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. திருமணத்திற்கு பிறகு நான் நடித்த 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. சில இயக்குநர்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்க வரும்போது, ஒருசீன் அல்லது இரண்டு சீன்களில் மட்டும் நடிக்க முடியுமா என்று கேட்பார்கள். அதை நினைத்தாலே கேவலமாக உள்ளது. 

 

எனக்கான நல்ல காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் எண்ணம். எனக்கு நெகட்டிவ் கேரக்டர்கள் வந்தாலும் யோசிக்காமல் நடிப்பேன். இந்தியில் வெளிவந்த கங்குபாய் காத்தியவாடி படத்தில் நடித்த ஆலியா பட்டிற்கு அழுத்தமாக கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அதுபோல் தமிழ் சினிமாவிலும் இருக்க வேண்டும். 

குயின், கிழவி:


எனக்கு சினிமாவை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கு. என் குழந்தைகளா, சினிமாவா என்றால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். ரசிகர்களுக்கு என்மேல் பாசம் இருந்தால் என்னை தமிழ்நாட்டு மருமகள் என்பார்கள். அதுவே கோவம் வந்தால் இந்திக்காரி என திட்டுவார்கள். சிலர் குஷி ஜோதிகா என்பார்கள். என்னை குயின் என்று சில ரசிகர்கள் அழைத்தாலும், ஒருசிலர் கிழவி என்பார்கள். ஆனாலும் இதுபோன்ற விமர்சனத்திற்கு எல்லாம் நான் கவலைப்பட்டது இல்லை. 

 

நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்கள் வேலை செய்து கொண்டு குடும்பத்தை பார்த்து கொள்வது வித்தியாசமான ரோல். ஆனால், சினிமாவில் அது முழுவதுமாக கூறப்படுவதில்லை” என்றார்.