சித்திரை மாதத்தில் வடதமிழக கோவில் விழாக்களை தடுக்க சதி நடப்பதாக இயக்குநர் மோகன் ஜி எக்ஸ் வலைத்தள பதிவில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே பிரச்சினை வெடித்தது. 


வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அவர்கள் சென்ற சில மணி நேரத்தில் மோதல் கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீவைக்கும் செயலிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தீவட்டிப்பட்டியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பினரும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சினை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. 










இந்நிலையில் பழைய வண்ணாரபேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சித்திரை மாதத்தில் தமிழகம் முழுக்க நடக்கும் அம்மன் கோவில் திருவிழாக்களை, முக்கியமாக வடதமிழக கோவில் விழாக்களை தடுக்கவும், திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி கோவில்களை மூடவும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு மைய அமைப்பினர் சதிதிட்டம் வகுத்துள்ளதை செய்தியாளர் ஒருவர் மூலம் அறிந்தேன்.


அதனால் கோவில் நிர்வாகிகள் கவனமாக, நிதானமாக பேச்சுவார்த்தைகளை கையாளுங்கள். பங்காளி தகராறுபோல உங்களுக்குள் இருக்கும் முரண்களை முன் வைத்து பேசினால், உங்கள் மரபு வழி வழிபாட்டை சிதைக்கும். அதனால் சதி வேலை செய்பவர்களை கண்டறிந்து ஊர்மக்களுடன் கலந்து திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கள்.முக்கியமாக திரெளபதி அம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் தான் குறி.. கவனமாக கையாண்டு மாற்று சமூக மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சூமூகமாக இணைந்து திருவிழாக்களை கொண்டாடுங்கள்.. பாரம்பரியம் காத்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.