தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் தெலுங்கு திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் இந்த ஆண்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் உள்ளனர் படக்குழுவினர். தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் "சலார்". சலார் என்றால் "தலைவன்" என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்.  




கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்குவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மேலும் சலார் படத்தை கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




படத்தின் சில பாகங்கள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸுக்கு அக்காவாக நடிகை ஜோதிகா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரத்தால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டிருப்பதால்,  லாக்டவுன் முடிந்தபிறகு படப்பிடிப்பில் ஜோதிகா இணைந்துகொள்வார் என கூறப்பட்டது. ஆனால் இது குறித்து விளக்கமளித்துள்ள ஜோதிகா தரப்பு, இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் ஜோதிகா தற்பொழுது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மண்ட் தயாரிப்பில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறாராம். அதற்கான கதை கேட்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




கொரோனா அலையின் தீவிரம் முடிவடைந்த நிலையில் ஜோதிகா நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபாஸின் "சலார்" திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு திரைக்கு  வர இருப்பதால், கொரோனா தீவிரம் குறைந்த பிறகு முழு மூச்சில் செயல்பட்டு படத்தை முடிப்பதற்கான திட்டமிடலில் இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில முக்கிய மொழிகளில் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சலார் படம் முற்றிலும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வருகிறது இருந்தாலும் கே.ஜி.எஃப் இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.