நம்மளோட உருவத்தை கார்டூனா பார்த்தா எப்படி இருக்கும்?! " என்ற ஆர்வம் நம்ம எல்லோருக்குமே இருக்கும் . இதனுடைய வெளிப்பாடுதான் தற்போதைய இணைய வைரலுக்கு முக்கிய காரணம். பொதுவாக மனிதர்களின் உருவங்களை கார்டூன் போல் சித்தரிப்பதற்கு "கேரிக்கேச்சர் ஓவியம்(caricature drawing) " என்ற பெயர் உண்டு. இதனை ஓவியர்கள் சில நிமிடங்களில் வரைந்துவிடுவார்கள்.
ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுக்தி இவ்வகை ஓவியங்களை எளிமையாக்கிவிட்டன. கேரிக்கேச்சர் அல்லது கார்டூன் மனிதர்களை உருவாக்குவதற்கான செயலிகள் பல சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெரும்பாலும் உருவ துல்லியம் கிடைப்பதில்லை, அப்படியே உங்களை பிரதிபலிக்கும் கார்ட்டூன் செயலிகள் சந்தையில் இருந்தாலும், அவற்றை கட்டண சேவையாகத்தான் பெற முடியும் .
ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறது டூன் செயலி (Toon app) . இந்த செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். டூன் செயலியை பதிவிறக்கம் செய்தபிறகு, உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகள் தெளிவாக தெரியும்படியான புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும், பதிவேற்றிய சில விநாடிகளின் உங்களின் துல்லியமான கார்டூன் முகம் கிடைத்து விடுகிறது. இந்த செயலியின் மூலம் முழு உருவத்தையும் கார்டூனாக்க இயலாது.
பின்னர் இணையத்தில் முன்பே உருவாக்கப்பட்ட கேரிக்கேச்சரின் டெம்ப்ளேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள் .வடிவேலுவின் "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி " படத்தில் வருவதுபோல இந்த தலை , அந்த உடலுடன் இணைய போகிறது. அதாவது டூன் செயலியில் உருவாக்கப்பட்ட தலை , கேரிக்கேச்சர் டெப்ளேட் உடலுடன் இணையப்போகிறது. இதற்காக பிக்ஸ் ஆர்ட் என்ற செயலியை பயன்படுத்தி , " கட் அவுட் " வசதி மூலம் தேவையான மாறுதல்களை செய்து இணைத்துக்கொண்டு, சேமித்து விட வேண்டியதுதான். இதனை செய்வதற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகலாம்.
இப்படி உருவான கார்டூன் மனிதர்கள்தான் #toonapp என்ற டேக்லைன் மூலமாக பதிவேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த கேரிக்கேச்சர் ட்ரெண்டில் தற்பொழுது பிரபலங்களும் கூட இணைந்து வருகிறார்கள்.