தெலுங்கு படங்களின் நிதியாளரான கிருஷ்ணா ராவின் மகளான ஜெயப்பிரதாவின் ரியல் பெயர் லலிதா ராணி ராவ். சிறுவயதில் நடனம் கற்றுக்கொண்டு வந்த இவருக்கு, பூமி கோஷம் என்ற படத்தில் மூன்று நிமிட பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்தது. முதலில் படங்களில் நடிக்க தயக்கம் காட்டிய ஜெயப்பிரதாவுக்கு குடும்பத்தினரின் ஊக்கம் வாழ்க்கையை திருப்பி போட்டது.  சினிமா உலகிற்கு பலரையும் அறிமுகப்படுத்திய பாலசந்தரின் மன்மத லீலை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெற்கே இருந்து வடக்கே சென்ற ஜெயப்பிரதா ஹிந்தி சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்தார். தொடர்ந்து எக்கச்சக்கமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த இவர், நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி போன்ற ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த வரிசையில் கமலின் தசாவதாரம் படத்தை குறிப்பிடாமல் இருந்தால் எப்படி..? கமலின் 10 அவதாரங்களில் ஒன்றான அவதார் சிங் கதாபாத்திரத்தின் அன்பு மனைவியாக நடித்திருப்பார் ஜெயப்பிரதா. ஹோ ஹோ சனம் பாடலில் இவரது பர்ஃபாமன்ஸ் சூப்பராக இருக்கும்.


அரசியல் வாழ்க்கை


தென்னிந்திய சினிமாவில் ஜொலித்த பலரில் சிலர், அரசியலில் எண்ட்ரி கொடுப்பது இந்த மண்ணின் ட்ரெண்டாக இருந்த போது 1994 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அந்த ஆண்டில் நடந்த பல பிரச்சாரங்களில் கலந்து கொண்டு அரசியலில் ஆக்டீவாக இருந்தார். தெலுங்கு தேச கட்சியில் பல உட்பூசல் நிலவிவந்ததால், சமஜ்வாடி கட்சியில் இணைந்தார். 
2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் தொகுதியில் எம்.பியாக பணியாற்றினார். 2019ல் பாரத ஜனதா கட்சியில் சேர்ந்தார்.


ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை 


சினிமா, அரசியல் என அனைத்திலும் கலக்கிய ஜெயப்பிரதா சென்னையில் ஜெயப்பிரதா தியேட்டர் காம்ப்ளெக்ஸ் நடத்திவந்துள்ளார். தான் சொந்தமாக நடத்தி வந்த திரையரங்கில், பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதனால், நடிகை ஜெயப்பிரதா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.


வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. தற்போது அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சில வருடங்களுக்கு முன்பு, 20 லட்ச ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் இருந்தது ஜெயப்பிரதாவின் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்.  மாநகராட்சி அதிகாரிகள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தியேட்டரில் இருந்த நாற்காலிகள், புரொஜெக்டர் மற்றும் பிலிம் ரோல்களை கைப்பற்றினர். பணியில் இருந்த ஊழியர்கள் உடனடித் தவணையாக ஐந்து லட்சத்தை வழங்கிய போது, ​​அதிகாரிகள் முழுத் தொகையையும் டிமாண்ட் டிராப்டாக (டிடி) செலுத்த வேண்டும் என்று கோரினர். அப்போது ஊழியர்களால் ரூ.20 லட்சத்தை செலுத்த முடியாததால், அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க : ABP Exclusive : "வீரப்பனை சுட்டுக் கொல்லல… போலீஸ் சொன்னது பச்ச பொய்!" - புகைப்படக் கலைஞர் சிவசுப்ரமணியன்..