கில்லி


விஜயின் கில்லி 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாடு முதல் பாரிஸ் வரை படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நடிகை த்ரிஷா கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டவிட்டர் பக்கத்தில் கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். 


20 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள கில்லி படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஓட்டேறி நரியாக நடித்த தாமு , விஜயின் தந்தையாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி , மற்றும் விஜயின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டவர்கள் மீண்டும் சிறப்பு கவனம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் கில்லி படக்குழுவினர் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் தாங்களும் இணைந்துள்ளார்கள். 


விஜயின் அம்மாவாக ஜானகி சபேஷ்




கில்லி படத்தில் விஜயின் அம்மாவாக நடிகை ஜானகி சபேஷ் நடித்திருப்பார். அப்பாவியாக மகன் சொல்வதை அப்படியே நம்பும் ஒரு அம்மாவாக இவரது கேரக்டர் இருக்கும் . வாஸ்து சரியில்ல வீட்ட மாத்தனும் என்று விஜய் சொன்னதும்  “ ஏங்க நம்ம வீட்ட வித்திரலாமா” என்று அவர் சொல்ல பதிலுக்கு ஆஷிஷ் வித்யார்த்தி “ இது கவுர்மெண்ட் குவாட்டர்ஸ் டி” என்று சொல்ல” அவரது அப்பாவித்தனம் சில இடங்களில் எல்லை மீறி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. அவர் வரும் காட்சிகளை மட்டுமே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனியாக பதிவிட்டு வருகிறார்கள்.  இப்படியான நிலையில் கில்லி படத்தின் இயக்குநர் தரணியுடன் படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார்  நடிகை ஜானகி சபேஷ். மேலும் அப்படி போடு பாடலுக்கு அவர் நடனமாடும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






 


நன்றி தெரிவித்த இயக்குநர்


கில்லி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் தரணி ரசிகர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் தற்போது நடித்து வரும் தி கோட் படத்தின் இயக்குநர்  வெங்கட் பிரபுவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.