நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் அமைந்துள்ளது சூரத் தொகுதி. சூரத் தொகுதியில் போட்டியிட வேட்பாளர்களிடம் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில், வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டும், பரிசீலனையும் நடைபெற்று வந்தது.
போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு:
இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியில் முகேஷ் தலால் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த சூழலில், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றுவிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு உரிய ஆவணங்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சூரத் தொகுதியில் இந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் மட்டுமே போட்டியிடுகிறார். இதனால், அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
எப்படி சாத்தியமானது?
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்புமனுத் தாக்ககல் கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது.
வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றே கடைசி நாள் என்ற சூழலில், அந்த மாநிலத்தின் முக்கிய தொகுதியான சூரத்தில் பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தவிர மொத்தம் 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த 8 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
இந்த சூழலில், இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் இன்றைய நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேரும் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனால், பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மட்டுமே போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உரிய கையொப்பமிடவில்லை என்று கூறி, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி:
போட்டியாளர்கள் யாருமே இல்லாத காரணத்தால் பா.ஜ.க. வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டில் மக்களவையின் உறுப்பினராக முதல் ஆளாக முகேஷ் தேர்வாகியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதற்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதேசமயம், முகேஷ் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வானதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மக்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ள முகேஷ் தலால் சூரத் நகரத்தின் பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். சூரத் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பி.காம் பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் சட்டம் மற்றும் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்துள்ளார். 1981ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.