நடிகை இளவரசி
1983ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கொக்கரக்கோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி தந்தவர் நடிகை இளவரசி (Actress Ilavarasi). தமிழ் சினிமாவில் அகண்ட விழிகள், வட்ட பொட்டு, வகிடெடுத்த நெற்றி என குடும்பப் பாங்கான நடிகைகளுக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் அறிமுகமான நடிகை இளவரசி, தன் 14 வயதில் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் கோலிவுட்டில் அறிமுகமானார்.
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்
கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த வாழ்வே மாயம் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்துக்கு இசையமைத்த கங்கை அமரன், பின் தான் இயக்கிய கொக்கரக்கோ திரைப்படத்தில் ஹீரோயினாக இவரை அறிமுகப்படுத்தினார். சினிமா பின்னணியைக் கொண்டவரும் நடனம் பயின்றவருமான இளவரசி, தன் முதல் படம் பெரிய அளவில் செல்லாவிட்டாலும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இளையராஜாவின் ‘கீதம் சங்கீதம்’ பாடல் இடம்பெற்றது இந்தப் படத்தில் தான். இந்தப் பாடலில் குறும்பான நாயகியாக வலம் வரும் இளவரசியை பலராலும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
அதன் பின் தன் குழந்தை முகம் காரணமாகவோ என்னவோ ஹீரோயின் ரோல் குறைந்த அளவில் கிடைக்க, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்க்கத் தொடங்கினார். குறிப்பாக பாக்யராஜின் தாவணிக் கனவுகள், விஜயகாந்தின் ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் கவனமீர்த்த இளவரசிக்கு திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் விசுவின் படங்கள்.
விசு பட நாயகி
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் விசுவின் மகளாக இவர் நடித்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற, அவரது மற்றொரு படமான அவள் சுமங்கலி தான், மோகன் ஜோடியாக ‘நிலவு தூங்கும் நேரம்’ பாடல் இடம்பெற்ற குங்குமச் சிமிழ் படம் என சில படங்களின் மூலம் ஹீரோயினாகவும் கவனமீர்த்தார்.
மற்றொருபுறம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்தார். மஞ்சுளா ஷர்மா எனும் பெயரில் கன்னட சினிமாவிலும், கல்பனா என தெலுங்கு சினிமா உலகிலும் இளவரசி பிரபல நடிகையாக வலம் வந்தார்.
சென்னையில் மகள், கணவருடன் செட்டில்
சென்னையைச் சேர்ந்தவரான இளவரசி இறுதியாக கோபால் எனும் வங்கி ஊழியரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து படிப்படியாக விலகினார். நடிகர் பிரஷாந்தின் குட்லக் படத்தில் 2000ஆம் ஆண்டு நடித்த பின் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது சென்னையில் தான் செட்டிலாகியுள்ளாராம். இவரது மகள் ஐடி துறையில் உயர் பதவியில் இருக்க, அவரும் தாயைப் போலவே நடனத்தில் தேர்ந்தவராக வலம் வருகிறார். சென்னை ஈசிஆரில் இளவரசியின் இல்லம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் நலம் விசாரித்து மகிழ்ந்து வருகின்றனர்.