அன்பே சிவம் படத்தையெல்லாம் ரீ -ரிலீஸ் செய்ய முடியாது என நடிகை குஷ்பூ நேர்காணல் ஒன்றில் தெரிவித்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கடந்த 2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர், சந்தான பாரதி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “அன்பே சிவம்”. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் ரிலீஸான காலக்கட்டத்தில் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் கொண்டாட மறந்த படங்களில் அன்பே சிவம் டாப் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. 


இந்த படம் ஓடாதது குறித்து இயக்குநர் சுந்தர்.சி சில நேர்காணல்களில் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை கமல் எழுதிய நிலையில் முதலில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக இருந்தது. ஆனால் கிளைமேக்ஸ் காட்சியை மாற்ற கோரிக்கை விடுத்ததால் கமல் இயக்குநரையே மாற்றி விட்டார். 


இதனிடையே கடந்த சில மாதங்களாக பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் அன்பே சிவம் படத்தையும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். 






ஒரு நேர்காணலில் பேசிய அவர், “அன்பே சிவம் படத்தையெல்லாம் ரீ -ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் எடுத்த பின் என்னுடைய கணவர் சுந்தர்.சி 2 ஆண்டுகள் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தாரு. ஆனால் இப்போது அந்த படத்தை ஆஹா ஓஹோன்னு கல்ட் படம் என கொண்டாடுகிறார்கள். இதே படத்தை நீங்கள் ரிலீஸான சமயத்தில் தியேட்டரில் போய்  பார்த்து ஹிட் ஆக வைத்திருந்தால் என் கணவர் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஆனால் எது நடந்தாலும் நன்மை என சொல்வோம். அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த படத்துக்குப் பின்னர் தான் நாங்கள் எங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி கிரியேஷன்ஸை தொடங்கினோம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம். சுந்தர் சி சிறந்த படங்களில் ஒன்று அன்பே சிவம். அந்த படத்துக்கான அவர் ஒவ்வொரு ஃப்ரேமும் உழைத்தார்” என கூறியுள்ளார்.