நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வுகள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளப்பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றிய தகவலை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரி, 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வு என களைக்கட்டிய ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வைத்து நடைபெற்றது. இந்த கியூட் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இருவரும் ஹனிமூனுக்காக ஆஸ்திரியா சென்றனர்.
அங்கு ரதாஸ்ப்ளாட்ஸ் சதுக்கம் மற்றும் பெல்வெடெரே அரண்மனைக்கு சென்ற அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஜொலித்த ஆஸ்திரியா நகரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி “லவ் ஷாதி டிராமா” என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.