விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 105வது நாளான இன்று பைனலிஸ்ட்டாக இருப்பவர்கள் அஸீம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி மற்றும் விக்ரமன்.
ரசிகர் பட்டாளத்தை திரட்டிய விக்ரமன் :
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் ஏராளமான பரிச்சயமான முகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் இருந்த சில புதியவர்களும் வந்து பிரபலமாகியுள்ளனர். ஆனால் முதல் முறையாக அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விக்ரமனுக்கு பெரிய அளவிற்கு ரசிகர் பட்டாளம் இல்லை என்றாலும் இறுதி கட்டத்தை நெருங்கும் சமயத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார்.
விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் :
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்தி தொகுப்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினருமான விக்ரமனுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விக்ரமனுக்கு ஹாட்ஸ்டார் மூலம் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்வோம் என ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார் திருமாவளவன்.
கண்டனம் தெரிவித்த வனிதா :
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் இந்த போஸ்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
வனிதா விஜயகுமார் தனது சோசியல் மீடியா மூலம் "என்ன நீங்கள் சொல்கிறீர்கள்... இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்... ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யுமான நீங்கள் உங்களின் செல்வாக்கை பயன்படுத்தி எவ்வாறு உங்கள் உறுப்பினர்களை ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் ஒரு போட்டியாளருக்கு வாக்களிக்க சொல்ல முடியும். மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் நாடகம்… பொதுமக்களின் அன்பையும் பாசத்தையும் வைத்து விளையாடுகிறீர்கள்.
அந்த வகையில் அரசியல் நோக்கத்திற்காக கமல்ஹாசன் தனது கட்சிகாகவோ, வேட்பாளருக்காகவோ வாக்களிக்க அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ சொல்லி கேட்கவில்லை.
விக்ரமன் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டார். தேவையில்லாமல் அரசியல் கட்சியின் செல்வாக்கை செலுத்தி அவரை கைப்பாவையாக ஆகாதீர்கள். ரியாலிட்டி ஷோவில் அரசியல் செல்வாக்கு சரியானதல்ல. இந்த போட்டியில் மற்ற போட்டியாளர்களும் போட்டியிடுகிறார்கள். எனவே இது நியாயமற்ற செயல். ஒரு தலைவர் தனது உறுப்பினர்களிடம் கேட்பதால் வாக்குகள் பார்வையாளர்கள் அல்லாதவர்களிடம் இருந்தும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது ஒரு என்டர்டெயின்மென்ட் பிளாட்ஃபார்மை தவறாக பயன்படுத்துவது போன்றது" பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.