ஹன்சிகாவின் திருமண ஏற்பாட்டு நிகழ்வுகள் தொடங்கி திருமணம் வரை அனைத்தும் லவ் ஷாதி ட்ராமா எனும் டாக்குமெண்டரி வெப் சீரிஸாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.


குழந்தை நட்சத்திரம்


இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பாலிவுட், கோலிவுட்,டோலிவுட் என முன்னணி நடிகையாக வலம் வந்து கவனமீர்த்தவர் ஹன்சிகா. இவர் தன் நீண்ட நாள் நண்பர் மற்றும் பிஸ்னஸ் மேனான சோஹைல் கத்தூரியாவை சென்ற டிசம்பர் 4-ஆம் தேதி கோலகலமாகத் திருமணம் செய்துகொண்டார்.




இந்தி சீரியலான ஷக்கலக்கா பூம் பூம், மற்றும் பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த கோய் மில் கயா ஆகியவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஹன்சிகா, அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே ஹீரோயினாக அறிமுகமானார்.


16 வயதில் ஹீரோயின்


1991ஆம் ஆண்டு பிறந்த ஹன்சிகா தன் 16 வயதிலேயே தெலுங்கு படமான தேசமுடுருவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழிலும் தனுஷுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் என தமிழிலும் பிசியான நடிகையாக மாறினார்.


இந்நிலையில், தோல் மருத்துவரான தாயைக் கொண்ட ஹன்சிகா அவரது பளபளக்கும் சருமத்துக்கு தன் தாய்தான் காரணம் என அப்போது முதலே தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில், ஹன்சிகாவுக்கு சிறு வயதிலேயே அவரது அன்னை ஹார்மோன் ஊசி போட வலியுறுத்தியதாகவும், அதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததாகவும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.


ஹார்மோன் ஊசி


இந்நிலையில், முன்னதாக வெளியான தன் திருமண ஆவணப் படத்தில் ஹன்சிகா இது குறித்து பதிலளித்துள்ளார்.




”பிரபலமாக இருப்பதற்கான விலை இதுதான். நான் 21 வயதை எட்டியபோது இதுபோன்ற தகவல்களைப் பரப்பினார்கள். நான் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாக அனைவரும் தெரிவித்தார்கள். நான் குழந்தைப் பருவத்திலிருந்து பெண்ணாக வளர்வதற்கு என் அம்மா ஹார்மோன் ஊசி செலுத்தியதாக தகவல் பரப்பினர்.


அது உண்மை என்றால் நான் டாட்டா பிர்லாவை விட பணக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும். இதை எழுதும் மக்களுக்கு கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா? நாங்கள் பஞ்சாபிகள். எங்கள் குழந்தைகள் 12 முதல் 16 வயதுக்குள்ளேயே பொதுவாக வளர்ந்து விடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


ஹன்சிகாவின் திருமணம்


மேலும், ஹன்சிகா சோஹைல் கட்டாரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் எனும் நிலையில்,  ஹன்சிகா தன் தோழியின் கணவரைத்தான் திருமணம் செய்துள்ளார் என்றும்,  ஹன்சிகா தான் அவரது முந்தைய திருமண முறிவுக்கு காரணம் என்றும் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவின.


இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள ஹன்சிகா, எனக்கு ஒரு நபரை நீண்ட காலமாகத் தெரியும் என்பதற்காக என் மீது பழி சுமத்த முடியாது. நான் ஒரு பிரபலம் என்பதால் என்னை குறை சொல்லி வில்லனாக சித்தரிப்பது அவர்களுக்கு எளிதாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.


ஹன்சிகாவின் லவ் ஷாதி ட்ராமா வெப் சீரிஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வருகிறது.