நகுல்


ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானார் நடிகர் நகுல். 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம் நகுலை நாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாசிலாமணி , வல்லினம்,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் நகுல் திரைத்துறையில் பெரிய வெற்றிப் படத்திற்காக காத்திருக்கிறார். நகுல் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் இருந்த வாஸ்கோடகாமா படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நகுல், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பிரேம்குமார், டி.எம். கார்த்திக், படவா கோபி, நமோ நாராயணா, ரவி மரியா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் ஆர்.ஜி கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் என்.வி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்.எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நடிகர் நகுலின் சகோதரியான நடிகை தேவையானி தனது தம்பி குறித்து உணர்வுப் பூர்வமாக பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


நான் அவனுக்கு அக்காவாக இருந்ததில்லை அம்மாவாக தான் இருந்திருக்கிறேன்


நிகழ்ச்சியில் பேசிய நடிகை தேவயானி ‘ இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. முதலில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெற்றிபெற்று அடுத்தடுத்து நீங்கள் நிறைய படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நகும் என்னுடைய சின்னத் தம்பி , எனக்கு அவனை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது. பாய்ஸ் படத்திற்கு பிறகு அவர் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்ததைப் பார்த்து ஒரு நடிகராக அவனது வளர்ச்சியை பார்த்து வியந்திருக்கிறேன். நகுல் மல்டி டேலண்ட் கொண்ட ஒரு நல்ல நடிகர். ஒரு படத்தை முழுமையான தனது தோள்களில் தாங்க தகுதியானவர். அவன் ஒரு நல்ல கதை வேண்டும். ஒரு நல்ல இயக்குநர் வேண்டும் . ஒரு சரியான கதாபாத்திரம் ஒரு சரியான கதைக்காக அவன் காத்திருக்கிறான். எ என்னுடைய அம்மா அப்பா இப்போது இல்லை ஆனால்  இந்த நேரத்தில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் எங்கள் இருவரையும் பார்த்து ரொம்ப சந்தோஷம் படுவார்கள். அவன் சிறுவனாக இருந்தபோது நான் சினிமவிற்கு நடிக்க வந்துவிட்டேன். அதனால் நான் அவனுக்கு ஒரு அக்காவாக இருந்ததில்லை ஒரு அம்மாவாக தான் இருந்திருக்கிறேன். அவன் ஒரு குட்டி பாப்பா. ல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அவன் அந்த நேரத்திற்காக காத்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன் . அந்த நேரம் அவனுக்கு கண்டிப்பாக வரவேண்டும். வாஸ்கோ டா காமா படத்தில் இருந்து அவனது காத்திருப்பு காலம் முடிவடைந்து விட வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்று அவன் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்று தேவயானி பேசினார்.