குழந்தைதனமான துறுதுறுப்பான நடிகைகள் எளிதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்கள். அப்படி கவனம் பெற்ற ஒரு நடிகை தான் பாவனா. அவரின் 38வது பிறந்தநாள் இன்று.


கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்த பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா மேனன். சினிமா மீது சிறு வயது முதலே தீராத ஆர்வம் கொண்டு இருந்தவருக்கு 16 வயதில் முதல் முறையாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை அமலாவின் தீவிர ரசிகையான பாவனா அவரை பார்த்து தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டார் என ஒரு முறை தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நம்மாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் அறிமுகமானார். மலையாளம், தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


 




தமிழில் தொடர்ச்சியாக வெயில், அசல், கூடல் நகர், ஜெயம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் ஜெயம் ரவி ஜோடியாக பாவனா நடித்த 'தீபாவளி' திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்தது. அதிலும் குறிப்பாக பாவனா என்ற அடையாளமே மாறி ரசிகர்கள் அப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயரான சுசி என்றே பிரபலமாக அழைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் பதிந்துபோனார் பாவனா. இதுவரையில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை பாவனா. பட வாய்ப்புகள் குறைந்ததால் 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


 


 



மிகவும் துணிச்சலான தன்னம்பிக்கையான பெண்ணாக இருந்த போதிலும் அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகுந்த மனவேதனையை அனுபவித்தார். அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு தலைகீழாக மாறிய அவரின் வாழ்க்கையை அடையாளத்தை போராடி மீட்டுள்ளார். ஒரு சாதாரண பெண்ணாக வாழ ஆசைப்பட்ட பாவனா இந்த சர்ச்சையால் நகர வலியை அனுபவித்து திரும்பி வந்துள்ளார்.  


சி. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் பாவனா நடித்து இருந்தார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயதேவ் இயக்கத்தில், ஜூன் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் ராஜன் தயாரிப்பில் வெளியான ' 'தி டோர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மீண்டும் அவர் திரைத்துறையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.