ஆடுஜீவிதம் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்தது தொடர்பாக நடிகை அமலாபால் கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. 


எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஆடுஜீவிதம்


மலையாள திரையுலகம் தரமான சினிமாக்களை தொடர்ந்து வழங்கி வருவதால், மொழி கடந்து பல மொழி சினிமா ரசிகர்களும் அங்கு வெளியாகும் படங்களை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு மல்லுவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று “ஆடுஜீவிதம்”. மலையாளத்தில் மிகவும் பிரபலமான நாவல்களில் ஒன்றான பெஞ்யாமினின்  "goat days" நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ், நடிகை அமலாபால், ஜிம்மி ஜீன் லூயிஸ் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்ற இயக்குநர் ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


காரணம் கேரளாவில் இருந்து வேலை தேடி சவுதி அரேபியாவுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக சிக்கிக் கொள்வதை பேசும் "goat days" நாவல் 2009ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வென்றது. மேலும்  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த நாவல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ட்ரெய்லர் பார்த்தவர்கள் ப்ருத்விராஜின் நடிப்பை பார்த்து மிரண்டு போயினர். படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர். 


நடிகை அமலாபால் பதில் 


அதேசமயம் இந்த ட்ரெய்லரில் பிருத்விராஜ் - அமலாபால் இடையேயான லிப் லாக் சீன் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக  பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். பொதுவாக மலையாளத்தில் இது போன்ற லிப் லாக் காட்சிகள் அரிதாகவே காட்சிப்படுத்தப்படும் என்பதால்  இந்த படத்தின் காட்சி பேசுபொருளானது. இந்நிலையில் இந்த காட்சி குறித்து நடிகை அமலாபால் செம கூலாக பதிலளித்துள்ளார். 


அவர் தனது பேட்டியில், ஆடுஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோதே லிப்லாக் காட்சி பற்றி சொன்னார்கள்.  கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடித்த எனக்கு இந்த மாதிரியான காட்சி பெரிய விஷயமில்லை என்றும் அமலா பால் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் கிட்டதட்ட 40 நிமிட காட்சிகள் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்து திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படத்திற்கு பின் தமிழில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை அமலாபால் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.