அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அதிமுக சார்பாக, குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, ராயபுரம் பகுதியில் அதிமுக 49வது வட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ள நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் உடன் வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை உள்ளிட்ட பழவகைகளையும் வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ”திமுகவை பொறுத்தவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் குறுகிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது. 2 வருடத்திலேயே 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளதாக நிதியமைச்சரின் ஆடியோ கூறுகிறது. அதனை முதலில் விசாரிக்க வேண்டும். அந்த பணம் இருந்தால் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவும். அரசாங்கத்துக்கு வரவேண்டிய வருவாய் ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு சென்றுள்ளது அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 ஆயிரம் கோடி ரூபாயை மீட்டெடுத்து அரசு கருவூலத்திற்கு கொண்டு வந்தால் மக்கள் பல்வேறு கஷ்டங்கள் தீர்ந்து வரி உயர்வு இல்லாமல் செயல்பட முடியும். இதன் மீது நடவடிக்கை எடுப்பது மத்திய அரசின் பொறுப்பு. அதேப் போல்தான் திமுகவின் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுக்கட்டும் வகையில் மத்திய அரசு பணியை தொடங்கி உள்ளது. ஜி என்றால் திமுகவுக்கு ஒத்துப்போகும் போல். 2 ஜி-யால் ஆட்சியை இழந்தது. ஜி ஸ்கொயரால் ஆட்சியை இழக்க போகிறது. திமுகவிற்கு சனிப்பிடித்து உள்ளதால். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
ஜி ஸ்கொயர் விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 வருடத்தில் ஜி ஸ்கொயர் பலமடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை தொடர வேண்டும். நிதியமைச்சர் ஆடியோ விவகாரத்தில் திமுக சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற முடியவில்லை. எலான் மஸ்க், பில்கேட்ஸ்-விட பெரும் பணக்காரராக ஆக வேண்டும் என ஆட்சியில் உள்ள குடும்பம் நினைக்கிறது. குடும்பத்திற்கு வருமானத்தை பெருக்க விஞ்ஞான ரீதியில் செயல்படுகின்றனர். மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதனை செய்யவில்லை. வருமானம் அதிகரித்துள்ளது. பார் செயல்பட தடைகள் உள்ள நிலையில் பாரை நடத்துவதற்காக அரசுக்கு வரவேண்டிய பணம் மாதம் ரூபாய் 40 கோடி அமைச்சருக்கு செல்கிறது.
விளையாட்டு திடலில், திருமண நிகழ்வுகளில் கூட மது அருந்த அணுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் மதுக்குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது திமுக. அரசாணை வெளியிட்டுவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் திரும்ப பெறுகின்றனர். தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கலாச்சாரம் உள்ளது அதனை மற்ற மாநிலங்களின் கலாச்சாரங்களுடன் ஒப்பிட கூடாது. இன்று விளையாட்டு திடலில், திருமண நிகழ்வுகளில் கூட மது அருந்த அணுமதியளிக்கும் அரசு நாளை பள்ளிகளிலும் மது அருந்து அனுமதியளிக்கும்.இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
வேலைநேர சட்ட திருத்த மசோதாவை கூட்டணி கட்சிகளே எதிர்க்கின்றன. சட்டமன்றம் முடியும் நேரத்தில் மசோதாவை நிறைவேற்றினர். திமுக அரசு முதலாளிகளுக்கான அரசாங்கமாக உள்ளது. ஓபிஎஸ் மாநாட்டின் மூலம் எந்த தாக்கமும், விளைவுகளும் ஏற்படாது. வீண் முயற்சி செய்கின்றனர். பணத்தை வீணாக செலவு செய்து செயற்கை தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.