ஐக்கிய அரபு அமீரகம் 10 வருடம் செல்லத்தக்க கோல்டன் விசாவை தொழிலதிபர்கள், முதலிட்டாளார்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், திறமைமிக்க மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகை அமலாபாலுக்கும் இந்த கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.


கோல்டன் விசா வழங்கியது குறித்து பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி, உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன்.


இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றிய மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் பார்வை மற்றும் குறிக்கோள்  எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பது பற்றியது. இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும் ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 






 


நடிகை அமலா பால் தற்போது கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல மற்றும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இது மட்டுமன்றி பாலிவுட்டில் ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்ற வெப் சீரீஸ் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியானது .


முன்னதாக, பிரபல நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பல பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றிருந்த நிலையில் அண்மையில் நடிகர் பார்த்திபனுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பார்த்திபன், கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். அந்த வரிசையில் தற்போது அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 






 


கோல்டன் விசா  


கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வகையிலான பிரேத்யக விசா ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்களது நாட்டை விட்டு திறமைமிக்க சாதனையாளர்கள் சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசாவின் நோக்கம்.


இந்த விசாவை 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் பெற முடியும். இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.