பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்ற காரணத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 


ஐஸ்வர்யா லட்சுமி எண்ட்ரீ


கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, 2014 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கால் பதித்தார். அதன் மூலம் சில பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் தலை காட்டினார். இதன் விளைவு ஐஸ்வர்யா லட்சுமியை சினிமாவுக்கு அழைத்து வந்தது. 2017 ஆம் ஆண்டு நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அவர் அறிமுகமானார். அப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. தொடர்ந்து மாயாநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா ரசிகர்கள் காட்டூர்கடவு, பிரதர்ஸ் டே என பல மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 


தமிழில் அறிமுகம் 


இதற்கிடையில் 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் தான் அவருக்கு முதல் படமாகும். தொடர்ந்து ஜகமே தந்திரம், புத்தம் புது காலை, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இதில் கட்டா குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் ஐஸ்வர்யா லட்சுமி சிறியவர் முதல் பெரிய வயது வரையிலான ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ‘பூங்குழலி’ கேரக்டரின் பெயரில் தான் அழைக்கிறார்கள் எனவும் அவர் பல நேர்காணலில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


முதல் சினிமா அனுபவம் 


இதனிடையே ஒரு நேர்காணல் ஒன்றில், தனது முதல் சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் என்னுடைய உணவு பழக்கம்தான் நான் சினிமாவிற்கு வர காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? எப்போதும் ஹோட்டலுக்கு சென்று  ருசியாக சாப்பிடுவது என் வழக்கம். அப்படித்தான் எம்.பி.பி.எஸ். கடைசி ஆண்டு பரீட்சை எழுதி முடித்து விட்டு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். அப்போது ஒரு படத்துக்கு நடிகர், நடிகை தேர்வு நடப்பதை அறிந்து சரி ஜாலியாக இருக்கும் என முயற்சி செய்தேன்.


ஆனால் எதிர்பாராமல் அதில் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். இப்படித்தான் என் சினிமா பயணம் தொடங்கியது. நடிக்க வந்த பின்னர் உணவு முறை, பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதேசமயம் வார கடைசியில் மட்டும் பிடித்ததை சாப்பிடுகிறேன். அதற்காக ஜிம்மில் கூடுதலாக கொஞ்ச நேரம் பயிற்சி செய்கிறேன். ஒல்லியாக இருப்பது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் எனவும் ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.