நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சியில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அவரை பிரபலமாக்காத நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக தொடங்கினார். தொடர்ந்து யாமிருக்கப் பயமே படத்தில் யோகிபாபுவை பற்றிய வசனமாக வரும் ‘பன்னி மூஞ்சி வாயா’ டயலாக் குழந்தைகளிடத்திலும் அவரை கொண்டு சேர்த்தது. 


இதன்பின்னர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க தொடங்கிய யோகிபாவுக்கு அவரின் குண்டான தோற்றமும், பரட்டையான தலைமுடியும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. கோலமாவு கோகிலா படம் மூலம் ஹீரோவாகவும் அவர் மாறினார். வடிவேலுக்குப் பின் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டரில் கோலோச்சி வந்தார். அவரும் ஒரு காலத்துக்குப் பின் ஹீரோவாக நடிக்க தொடங்க, அந்த இடத்தில் தற்போது யோகிபாபு தான் உள்ளார். 






அவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து படங்களிலும் காமெடி, கதையின் நாயகன் என மிளிர்கிறார். அவர் நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற அனைவரது கவனமும் யோகிபாபு மீது தான் உள்ளது. பொம்மை நாயகி, யானை முகத்தான் என சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது ஜெயிலர், ஜவான், எல்.ஜி.எம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 


இப்படியான நிலையில் யோகிபாபு இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வண்ணம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. வானவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஷஜின் கே சுரேந்திரன் இயக்குகிறார். மேலும் திலக் ரமேஷ், லட்சுமி பிரியா, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். தாமஸ் ரென்னி ஜார்ஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். காட்டின் வளம் அழிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.