சினிமாவில் நடிக்கவே கூடாது என்று தான் உறுதியாக இருந்ததாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.
வேல ராமமூர்த்தி
நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட ஆளுமையாக இருந்துவருபவர் வேல ராமமூர்த்தி. குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மதயானைக் கூட்டம், கிடாரி, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வந்தது குறித்து தனது அனுபவங்களை சித்ரா லட்சுமணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் வேல ராம மூர்த்தி.
‘சினிமாவில் நடிக்கவே கூடாது என்று இருந்தேன்’
“ என்ன ஆனாலும் சினிமாவில் நடிக்கவே கூடாது என்றுதான் நான் முடிவு செய்திருந்தேன். ஏனால் சாலமன் பாப்பையா , லியோனி மாதிரியான பல்வேறு பிரபலங்கள் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பிரபலமாக இருந்தவர்கள். இந்தப் பிரபலியத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களை சினிமாவில் ஒரு சில படங்களில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள். ஒரு எழுத்தாளராக இருந்தது எனக்கு போதுமானதாக இருந்தது. நாடகத்தின் மேல் இருந்த ஆர்வத்தினால் வீதி வீதியாக நாடகத்தை கொண்டு சேர்த்திருக்கிறேன். எழுத்தாளனாக எனக்கு வீட்டில் மரியாதை எல்லாம் இருந்தது இல்லை. ஏதாவது இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து கிளம்பிச் செல்லும் போது எல்லாம் என் மனைவியிடன் திட்டு வாங்கிக் கொண்டு தான் செல்வேன்.
அப்படியான நேரத்தில் தான் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் என்னை அழைத்து அவரது படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றார். எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று நான் அவரிடம் மறுத்துவிட்டும் பல மாதங்கள் எனக்கு ஃபோன் செய்து பேசிக் கொண்டு இருந்தார். ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தபோது அவர் எதேச்சையாக எனக்கு ஃபோன் செய்தார். நான் சென்னையில் இருப்பது தெரிந்தது என் விலாசத்தை வாங்கி அண்ணா நகரில் என்னை வந்து பார்த்து மதயானைக் கூட்டம் படத்தின் கதையைச் சொன்னார். இந்தப் படத்தில் அவர் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் உண்மையில் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. உடனே சம்மதித்துவிட்டேன்”
சினிமா எனக்கு செட் ஆகல
“மதயானைக் கூட்டம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய மூன்றாவது நாளில் எனக்கு சினிமா செட் ஆகவில்லை என்று உணர்ந்தேன். இப்படியான இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும். இயக்குநரிடம் சொல்லிவிட்டு போகலாமா, சொல்லாமல் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தின் இயக்குநர் இளவரசன் என்னை வந்து பார்த்தார்.
எனக்கு சினிமா சரியாக வராது நான் கிளம்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ”இளவரசு என்னிடம் தயவு செய்து கொஞ்சம் யோசிங்க சார். நாங்க எல்லாம் முப்பது வருஷமா சினிமாவில் இருக்கோம் ஒரு ஓரமா கூட வரமுடியல. உங்களுக்கு கிடைச்சிருக்க கேரக்டர் எவ்வளவு பெரிய கேரக்டர் தெரியுமா சார். இந்தப் படம் ரிலீஸாகவும் நீங்க எங்க இருப்பீங்கனு பாருங்க“ என்றார்.
நான் நடித்த முதல் படத்திற்கே தேசிய விருதுக்கான பரிந்துரையில் என் பெயர் இருந்தது. 18ஆம் தேதி விருது அறிவிக்க இருந்தபோது முந்தின நாள் உங்களுக்கு தான் விருது என்று எனக்கு டெல்லியில் இருந்து ஃபோன் வந்தது. ஆனால் அடுத்த நாள் ஒரு மராத்தி நடிகருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது. அதில் என்ன அரசியல் நடந்தது என்று தெரியவில்லை. எனக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தேன். அந்த தன்முனைப்பு இல்லாமல் இருந்திருந்தால் நான் சொன்னது போல் மற்றவர்கள் மாதிரி ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் நான் காணாமல் போயிருப்பேன்” என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.