தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் பெரியசோரகை பகுதியில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி சென்றாய பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவங்கினார். பின்னர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



இந்த நிலையில் சேலம் பட்டை கோவில் பகுதியில் சேலம் அதிமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சேலம் கடைவீதி பகுதிகளில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


சேலம் கடைவீதி பகுதியில் இருந்து துவங்கி சின்ன கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் பகுதி ஆகிய பகுதிகளில் வேட்பாளரை அழைத்துக் கொண்டு நடந்தே சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோரிடம் அதிமுக வேட்பாளர் விக்னேஷ்க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு கேட்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திராட்சை, எலுமிச்சை, கீரை, காய்கறிகள் என வியாபாரிகள் பாசமாக வழங்கினர். அப்போது காய்கறிகள் மற்றும் பழங்களை எங்கிருந்து கொள்முதல் செய்கிறீர்கள்?, அதன் விலைகள் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த கடைவீதி பகுதிகளில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே போன்று இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.