நடிகர் விவேக்கின் ஆசையை தனுஷ் நிறைவேற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் திருச்சிற்றம்பலம் படத்தில் படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தோழி நமக்கில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது.
இந்நிலையில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் டிவியில் நடிகை டிடி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது டிடி விவேக்கிடம் Rapid Fire எனப்படும் ரவுண்டில் கேள்விகள் கேட்க அதற்கு அவர் உடனடி பதில் அளித்தார். அப்போது தமிழ் சினிமாவில் நல்லா வரவேண்டிய இயக்குநர் என்றால் யாரை சொல்வீர்கள்? என கேட்க, சட்டென்று திருச்சிற்றம்பலம் பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் பெயரை சொல்கிறார்.
தொடர்ந்து பேசிய விவேக், அவர் அழகான இயக்குநர். மறுபடியும் தனுஷே ஒரு வாய்ப்பு கொடுத்து அவரை கொண்டு வந்து மேலே நிறுத்தணும் என கூறியுள்ளார். முன்னதாக மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் காமெடி கேரக்டரில் விவேக் நடித்திருந்தார். மித்ரன் தனுஷை வைத்து 3 படங்களில் யாரடி நீ மோகினி தவிர குட்டி, உத்தமபுத்திரன் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேபோல் கடைசியாக 2016 ஆம் ஆண்டு படமெடுத்த மித்ரன் கிட்டதட்ட 6 ஆண்டுகள் கழித்து திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.
அதாவது அந்த நிகழ்ச்சியில் விவேக் சொன்னது போலவே தனுஷ் தான் மீண்டும் மித்ரனுக்கு வாய்ப்பளித்து கைதூக்கி விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தனுஷைப் பாராட்டி வருகின்றனர்.