கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 17 ஆயிரத்து, 908 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 19 ஆயிரத்து, 922 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 16 ஆயிரத்து, 702 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 748 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 375 கன அடியாக இருந்தது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 446 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 31 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.19 அடியாக இருந்தது. 




திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 


கரூர் மாவட்டத்தில், காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர், 10.4, மி.மீ., க.பரமத்தி, 8.6 மி.மீ., ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.58 மி.மீ., மழை பதிவானது.


நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு


ஆத்துபாளையம் அணை விரைவில் நிரம்ப உள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், கார்வாழி அணை, 18 ஆண்டுகளுக்குப் பின் கடந்த, 2019 நவம்பர் மாதம் நிரம்பியது. இதை அடுத்து, பாசனத்திற்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த, 2020 மற்றும் 2021ல் அணைக்கு  கூடுதல் தண்ணீர் வந்ததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 




கடந்த, 15 நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. காலை 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இருப்பினும், 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.56 அடியாக இருந்தது. இதனால், விரைவில், அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆத்துப்பாளையம் அணை மூலம், க.பரமத்தி, கரூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது.