கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தும்படி தமிழக பொதுப் பணித் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 68 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதியில், 44 மீனவ கிராமங்கள் உள்ளதாகவும், அங்குள்ள மீனவ குடும்பங்கள் அனைத்து மீன்படிப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசின் பொதுப் பணித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திடம் உரிய அனுமதி பெறாமலும், முறையாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமலும், துறைமுக பகுதியில் தடுப்பணை கட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படையும்  என்றும் மீன்பிடிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கில் பொதுப் பணித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இந்த தடுப்பணை கட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், உரிய அனுமதி வாங்கி தான் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. எனவே கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினரன நீதிபதி ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், தடுப்பணை கட்டும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி பொதுப் பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். கட்டுமானத்தை இடிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டால்,  பொது மக்கள் வரிப்பணம் வீணாகும் என்பதால், தமிழக அரசு கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 


மேலும், இதுதொடர்பாக கடலோர ஒழுங்கு முறை மண்டல ஆணையத்திடம், மனுதாரர் தரப்பில் மனு அளித்திருந்தால் உரிய முறையில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடிய  பொது பணித்துறை, அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிக்கையை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் பொது பணித்துறை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு ஆக்கிரமிப்பு இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.