"அவரை தவிர எனக்கு  வேறு யாருமில்லை"  என்று தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், மறைந்த நடிகர் விவேக்கின் உற்ற நண்பருமான செல் முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செல் முருகனின் ரசிகர் ஒருவர் விவேக்கின் மரணம் குறித்தும், செல் முருகனின் நிலை குறித்தும் கவிதை ஒன்றை வடித்திருந்தார். 


அதில்,        


"ஓர் மரணம் என்ன


செய்யும்


சிலர் புரொஃபைலில் கறுப்பு


வைப்பார்கள்


சிலர் ஸ்டேட்டஸில்


புகைப்படம் வைப்பார்கள்


சிலர் Rip புடன்


கடந்து போவார்கள்


சிலர் ஆழ்ந்த இரங்கலை


தட்டச்சிடுவார்கள் சிலர் கண்ணீர்


குறியீட்டுடன் கழன்று


கொள்வார்கள்


ஆனால் அண்ணா....


உண்மையான ஜீவன் உன் உயிர் தோழன்


என் முருகனை... விட்டு விட்டு


கடவுள் முருகனை காண


காற்றில் கரைந்து


விட்டாயோ! 


இங்கு எல்லாருமே முருகன் தான் துணை


என்பார்கள்!


இனி என் முருகனுக்கு யார்? துணை


விடையில்லாமல் விரக்தியில்


கேட்கிறேன்?


இனி அவனுக்கு


யார்? துணை" 


எனக் கேள்விகளை கேட்டிருந்தார். 


இதற்கு  செல்முருகன் தனது ட்விட்டரில் "அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல" என்று பதிலளித்தார். 



செல் முருகன்


 


நடிகர் விவேக்கின் ரசிகர்கள் ட்விட்டரில் செல் முருகனுக்கு தங்கள் ஆதரவுகளை அளித்து வருகின்றனர். "தைரியமா இருங்க சகோதரா. இரத்தமும் சதையும்போல நீங்க இருந்தீங்க. இப்போ உங்கள நெனச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு. விவேக் சார் பாதிலேயே விட்டுட்டு போன வேலைய நீங்க முடிச்சுவிடுங்க. நெறைய மரங்கள் நீங்க நடணும். நிறைய படங்கள் நடிக்கணும். உங்க ரூபத்துல விவேக்கை நாங்க பார்க்கணும். என் ஆசை" என ஒருவர் பதிவிட்டார். "அவர் இல்லை என்றதும் உங்கள் நினைவு மட்டுமே வந்தது. அவர் இல்லாமல் உங்களை நான் பார்த்ததே இல்லை. உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இருப்பினும் மீண்டு வாருங்கள், அவரின் கொள்கைகளையும் ஆசைகளையும் கையில் எடுத்துக்கொண்டு!" என மற்றொரு பதிவர் பதிவிட்டார்.     




கடந்த 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக் மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் விருதுகள் மற்றும் பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். திரைப்படங்களில் நடிகர் விவேக் மற்றும் செல் முருகன் நட்புக் கூட்டணி மிகவும் பிரசித்தி பெற்றது. திரைத்துறையைத்தாண்டி இவர்களின் நட்புறவு ஆழமாக இருந்து வந்தது.  


 




விவேக் நடித்த பல காமெடி காட்சிகளில் செல் முருகன், கொட்டாச்சி, மயில் சாமி இடம்பெறுவது வழக்கம். 1990-களில் சினிமா கலைஞர்களுக்கு செல்ஃபோன் விற்று வந்ததால் இவர்'செல் முருகன்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் நடிகர் விவேக்கின் அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது. விவேக் போன்ற ஒரு புகழ்பெற்ற கலைஞனின் மனதில் இடம்பெறுவது என்பது மிகக்கடினம். செல்முருகனின் நற்பண்பு, திறமை, ஆற்றல் மற்றும் நல்ல நடத்தை, பண்புகள் இந்த நட்புக்கு ஒரு  அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது என்றால் அது மிகையில்லை.