நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்தது.


இதையடுத்து, கொரோனா பரவலை கடுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. இதன்படி, நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படும் மதுபானக் கடைகளிலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு ஆலோசித்தது. இந்த நிலையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, மதுபானக் கடைகளில் வரிசையில் நிற்பவர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளி இருக்கவேண்டும். மதுவாங்குபவர்கள் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டும். கூட்டமாக நின்று வாங்க கூடாது. கடையில் பணிபுரிபவர்கள் மூன்று அடுக்கு முகக்கவசம், கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.


       



டாஸ்மாக் கடைகளை தினசரி இரு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நின்று வாங்குகிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். டாஸ்மாக் கடைக்கு முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான் மது விற்கவேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையின் உள்புறத்தில் அனுமதிக்க கூடாது.  வழக்கமான நேரமான மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் மதுபானக் கடைகள், இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும். தமிழக அரசின் இந்த புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. 


தமிழக அரசின் புதிய விதிகளைத் தொடர்ந்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை டாஸ்மாக் ஊழியர்கள் தொடங்கிவிட்டனர். தமிழக அரசு கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதித்து இருந்தது. ஆனால், மதுபானக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு புதிய விதிகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.