தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் விவேக்கின் 3ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. தமிழ் சினிமாவின் சின்னக் கலைவாணர் எனக் கொண்டாடப்பட்டு, மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, அவர்களது மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் விவேக் (Vivek). கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தன் 59ஆவது வயதில் விவேக் திடீரென காலமானது அவரது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. 


பன்முகத் திறமை, சமூகப் பணி




இயக்குநர் பாலச்சந்தரின் பட்டறையில் இருந்து வந்து, அவரது மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விவேக்,  தமிழ் சினிமாவில் காமெடி என்ற ஒற்றை டிராக் தாண்டி, பன்முகத் திறமையாளராக வலம் வந்தார். 


2009ஆம் ஆண்டு தன் கலைப் பணிக்காக பத்மஸ்ரீ விருது வென்ற விவேக், தமிழ் சினிமாவில் கதாசிரியராக தன் பயணத்தைத் தொடங்கியவர். இது தவிர, பாட்டு, நடனத் திறமை, சமூகப் பணி என வலம் வந்த விவேக், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது பெருமதிப்பு கொண்டவர்.


 விவேக்கின் கனவுத் திட்டம்


அப்துல் கலாமை நேர்க்காணல் செய்தது தொடங்கி, அவர் மீது கொண்ட பெருமதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடும் சமூகப் பணிகளில் விவேக் தன்னை ஆழ்த்தி வந்தார்.






நடிகர் விவேக், தான் உயிருடன் இருந்தபோது ‘கிரீன் கலாம்’ என்ற திட்டத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார். ஆனால் அவர் மரணமடைந்தபோது சுமார் 33 லட்சம் மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டிருந்தன. இந்நிலையில் அவரது கனவை நனவாக்கு வகையில் விவேக்கின் மேலாளர், நடிகர் செல் முருகன் இந்தத் திட்டத்தை கையிலெடுத்தார்.


அதன்படி, ‘விவேக் க்ரீன் கலாம்’ என இத்திட்டத்தின் பெயரை மாற்றி தொடர்ந்து மரம் நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விவேக்கை நினைவுகூறும் வகையில், வைபவ் மற்றும் படக்குழுவினர் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.


நடிகர் வைபவ் தற்போது தன் 27ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தின் விவேக்கின் மேலாளரும் பிரபல காமெடி நடிகருமான செல் முருகனும் இணைந்து நடித்து வருகிறார். சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை அனுசரிக்கும் வகையில் இந்தத் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில்  நடிகர் வைபவ் உள்ளிட்ட படக்குழுவினர் மரக்கன்றுகளை நடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.



மறைந்தும் தொடரும் விவேக்கின் சமூகப் பணி


இதேபோல் முன்னதாக நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினியின் திருமணம் நடைபெற்றபோது மணமக்கள் தங்கள் திருமண விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் வழங்கினர்.


தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதேபோல் விவேக் நினைவாக மரக்கன்றுகள் தொடரும் பணிகளை அவர் மறைந்த பின்னும் சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், மறைந்தும் நடிகர் விவேக்கின் கனவுத் திட்டம் பலர் மூலம் இப்படி தொடர்ந்து வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.