The Greatest of All Time படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடலின் அர்த்தம் என்ன என்பதை மதன் கார்க்கி விளக்கம் கொடுத்துள்ளார். 

 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, சினேகான்,லைலா, மைக் மோகன் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ள படம் “The Greatest of All Time”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது. மதன் கார்க்கி வரிகளில் விஜய் பாடிய இப்பாடல் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் வருகையை மையமாக வைத்து எழுதப்பட்டதுபோல தெரிகிறது. 

 



இதனை மறுத்துள்ள மதன் கார்க்கி, விசில் போடு பாடலின் பின்னணி பற்றி விளக்கியுள்ளார். அதில், “விஜய்யுடன் படம் பண்ணும்போது எப்போதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும். என்ன மாதிரியான பாட்டாக இருந்தாலும் டான்ஸ், குரலில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடுவார். வெவ்வேறு சமயங்களில், சூழலில் கேட்கும்போது அந்த வரிகள் அதற்காக எழுதியது போல இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். 



விசில் போடு பாடல் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி எழுதியதாக கூட எடுத்துக் கொள்ளலாம். நான் பாடலை எழுதும்போது அவர் அரசியல் வருகை பற்றி தெரிவிக்கவில்லை. வெங்கட் பிரபு மட்டும் இந்த படத்துக்கு பிறகு விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவித்தார். அதனைக் கருத்தில் கொண்டும் வரிகள் எழுதப்பட்டது. 


பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்றால் அரசியல், பார்ட்டி என எதை வேண்டுமானாலும் குறிக்கும். அப்படித்தான் இந்த பாடல் எழுதப்பட்டது. விஜய் இந்த பாடலை கேட்டு விட்டு “நன்றி” என சொன்னார். பூஜைக்கு ஒருநாள் முன்னாடி இந்த பாடலை எடுத்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலை ரொம்ப என்ஜாய் செய்தார்கள். முதலில் அந்த பாடலில் மைக்கேல் ஜான்சன்ன்னா மூன் வாக்.. ஜானி வால்கருக்கு செல்வாக்கு என ஒரு வரி எழுதப்பட்டது. பின்னர் அந்த வரியை நீக்கி விட்டு மார்லன் பிராண்டோ நான் டான் வாக் என மாற்றினேன். 


வாக், வாக் என வரிகள் முடியும் நிலையில் மாற்றம் வரணும்ன்னா கோ வாக் என்ற வரி வரும். அதனை மாற்றம் வேண்டும் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.இன்னொரு வரியில் கோ வாக் என சேரும் போது கோவாக் என வரும்.  கோ என்றால் அரசன் என பொருள் மாற்றம் வேண்டும் என்றால் அரசனாக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம். 


சில பாடல்கள் எல்லாம் வெளியான உடனே எல்லாரிடத்திலும் கொண்டாடப்படும். ஆனால் மெலோடியாக போடப்படும் பாடல்கள் மெதுவாக தான் ரீச் ஆகும். அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். வெங்கட் பிரபுவுடன் நான் பிரியாணி படத்தில் இருந்து தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன். இந்த படத்தில் நான் ஒரு பாடல் மட்டும் தான் எழுதியிருக்கிறேன்” என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.