பிரபல நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஷ்ணு விஷால் ட்வீட்
பொதுவாக திரையுலகில் வாய்ப்புகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையில், கிடைத்த வாய்ப்பு, கை நழுவும்போதும், அதே வாய்ப்பு மற்றொருவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு பிரபலங்கள் வருத்தப்படுவார்கள். சொல்லப்போனால் அந்த படம் நான் நடிக்க வேண்டியது, இந்த கேரக்டர் என்னை தான் அணுகினார்கள் என வெளிப்படையாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல, ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு தான் போவார்கள்.
அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால், ‘நான் மகான் அல்ல’ படம் பற்றி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனது 2வது படமாக அமைய வேண்டியது. எல்லாம் இறுதியாகி விட்ட நிலையில் விதி வேறு திட்டம் வைத்திருந்தது. நான் மகான் அல்ல மட்டும் என் 2வது படமாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என சில சமயங்களில் நினைத்து பார்ப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.
நான் மகான் அல்ல படம்
2010 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி,காஜல் அகர்வால்,ஜெயப்பிரகாஸ்,சூரி, ப்ரியா அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘நான் மகான் அல்ல’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நான் மகான் அல்ல திரைப்படம் நடிகர் கார்த்தியை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய படங்களில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்த படம் வெளியாகி நேற்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதில் ஒரு பதிவை குறிப்பிட்டே நடிகர் விஷ்ணு விஷால் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
சுசீந்திரன் - விஷ்ணு விஷால் கூட்டணி
அதேசமயம் விஷ்ணு விஷால் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தின் மூலமாக சுசீந்திரன் இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்தார். எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து இருவரும் மாவீரன் கிட்டு, ஜீவா உள்ளிட்ட படங்களில் இணைந்தனர். அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Thalapathy 68: யுவன் மட்டுமில்ல... விஜய் படத்தில் இணையும் ‘வாரிசு’ இசையமைப்பாளர்.. தளபதி 68 சுவாரஸ்ய அப்டேட்!