பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட பூமிகா, 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த யுவகுடு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரி படத்தில் நடித்த பூமிகா, அதே ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த குஷி படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார். குஷி படத்திற்காக சிறந்த பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார்.
தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் இணைந்து ஸ்நேஹமண்டே இடேராவில் நடித்த பூமிகா தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ரோஜா கூட்டம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறினார். 2006ம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த பூமிகா, இளைஞர்கள் கொண்டாடும் ஐஸூவாக மாறினார்.
முதல் பாதியில் ஹோம்லி லுக்கில் அமைதியான பயந்த சுபாவமுள்ள பெண்ணாகவும், படத்தின் கிளைமாக்சில் மாடர்ன் பெண்ணாக வந்து அல்டிமேட் செய்திருப்பார். சில்லுனு ஒரு காதலில் ஐஸூவின் காதலை கூறும் முன்பே வா அன்பே வா பாடலை ரசிகர்கள் முணுமுணுக்காமல் இருந்ததில்லை என்ற அளவுக்கு காதல் காட்சிகளிலும், காதலை பிரியும் வலியையும் நடிப்பில் காட்டி அசத்தி இருப்பார் பூமிகா.
தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து வாசு, மகேஷ்பாபு நடித்த கில்லி ரீமேக் படமான ஒக்கடு, ஜூனியர் என்.டி.ஆர். உடன் இணைந்து சிம்ஹத்ரி, இந்தியில் சல்மான் கான் நடித்த தேரே நாம், அபிஷேக் பச்சனுடன் ரன், ரவி தேஜாவுடன் நா ஆட்டோகிராப், அமிதாப் பச்சனுடன் இணைந்து தில் ஜோ பி கஹே, சிரஞ்சீவியுடன் இணைந்து ஜெய் சிரஞ்சீவி, மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பிரம்மாரம், பிரகாஷ் ராஜூடன் இணைந்து கலெக்டர் காரி பார்யா, தமிழில் பிரபுதேவாவுடன் இணைந்து களவாடிய பொழுதுகள், பாலகிருஷ்ணாவுடன் பீஷ்மா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பூமிகா, ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’, யூ டர்ன், கொலையுதிர் காலம், சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த கண்ணை நம்பாதே படத்தில் இரட்டை வேடத்தில் வில்லியாகவும் பூமிகா நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் பூமிகா 2007ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பூமிகா இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட பூமிகா, “உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எவ்வளவு செய்தாலும் அது எப்போதும் குறைவாகவே இருக்கும், அவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அதுவும் எப்போதும் குறைவாகவே இருக்கும்” என குறும்புடன் பதிவிட்டுள்ளார்.