விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், “இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக, கேப்டன் விஜயகாந்த் நடித்த கலைத்துறையில் ஒரு நடிகனாக, அவரின் ரசிகனாக, விஜயகாந்த் பணியாற்றிய நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளராக இருந்ததுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு வாக்களித்த வாக்காளர் நான்.
நிறைய பேர் சொன்னமாதிரி விஜயகாந்த் சாமி மாதிரி. இறந்ததுக்கு அப்புறம் தான் சாமின்னு சொல்வாங்க. ஆனால் கேப்டன் வாழும்போதே சாமி என பெயர் வாங்கியவர்களில் ஒருவர். சினிமாத்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல யார் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தால் சாப்பாடு போட வேண்டும் என நினைத்தவர். நான் கேள்விப்பட்டவரை உதவி இயக்குநர்களுக்கும் ஒரு பலம் இருந்தது என்றால் அது உணவுக்காக விஜயகாந்த் ஆபீஸ் இருக்கிறது என்ற நம்பிக்கை தான். சாப்பாடு விஷயத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது என எங்களை மாதிரியான இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர் விஜயகாந்த் அண்ணன்.
மன்னிப்பு கேட்ட விஷால்
அவர் பாதையில அப்படி பண்ண வேண்டும் என்ற விஷயத்தில் நாங்களும் முயற்சி செய்து வருகிறோம். விஜயகாந்த் மறைவு அன்று நான், கார்த்தி எல்லாம் ஊரில் இல்லை. ஆனால் அன்றைக்கு கூட இருந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். அதனால் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்த் நிறைய நடிகர்கள் வருவதற்கு ஒரு தூணாக இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. காசு கொடுத்தாலும் வாங்கியிருக்க மாட்டார்.
அன்றைக்கு ஒரு பிளாட்பார்மா இருந்து வாய்ப்பு கொடுத்தார். நான் சண்முக பாண்டியனிடம் ஒரு விஷயம் தெரிவிக்க நினைக்கிறேன். உங்க வீட்டு பிள்ளையா சொல்கிறேன், ‘உன்னோட படத்துல நானும் நீயும் சேர்ந்து நடிக்க வேண்டும் என உனக்கு ஆசை இருந்தால் கண்டிப்பா வர்றேன். இது வெறும் வார்த்தையாக சொல்லவில்லை. நீயும் அப்பா மாதிரி பெரிய ஸ்தானத்துக்கு வர வேண்டும். இதை பரிகாரமாக நினைத்துக் கொள்கிறேன்’.
விஜயகாந்தை பார்க்கும்போது எனக்கு தைரியம் தான் நியாபகம் வந்தது. நான் கேப்டன் விஜயகாந்தை சந்திக்க வீட்டுக்கு வந்த போது பிரமலதா என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். நடிகர் சங்கம் கட்டிடத்தின் பத்திரத்தை கொண்டு வந்தபோது லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சொல்லி விட்டு பத்திரத்தை அதில் வைத்தார். அந்த அளவுக்கு விஜயகாந்துக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. எல்லாரும் சொன்ன மாதிரி தமிழ்நாடு ஒரு தலைவனை இழந்துள்ளது. கேப்டன் நடிகர் சங்கத்தை மீட்டு அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்றிணைத்தார்.
எல்லாரையும் சரிசமமா பார்ப்பவர்களை சினிமாவில் காண்பது அரிது. எல்லாருக்கும் ஈகோ இருக்கு என்பதை வெளிப்படையாக சொல்கிறேன். ஆனால் ஈகோ இல்லாதவர்களில் விஜயகாந்தும் ஒருவர். 54 புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே உலக நாயகன் விஜயகாந்த் தான். அவர் செய்த நற்பணிகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
லாரன்ஸ் வழியில் விஷால்
முன்னதாக விஜயகாந்த் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்று வந்த பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னால் முடிந்த உதவியாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் உடன் இணைந்து நடிக்கவே அல்லது கேமியோ கேரக்டரில் தோன்றவோ தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் விஷாலும் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.