லத்தி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷாலில் நடிப்பில் சமீபத்தில் எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்களும், விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் தயாராகி வரும் திரைப்படம் “லத்தி”. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் முதல் பேன் இந்தியா படமாக லத்தி உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 






ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பாழடைந்த பங்களா ஒன்றில் விஷால்  ரவுடிகளை ஒரே நேரத்தில் அடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.   மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்த போது விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் கேரளாவுக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடந்து மீண்டும் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. 


அப்போது படத்தில் இடம்பெறும் மற்றொரு சண்டைக்காக கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும்போது  ரவுடிகள் தாக்க முயலும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் விஷால் காலில் எதிர்பாராத விதமாக நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.