ரவி அரசு இயக்கத்தில் விஷால் மகுடம் என்கிற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும் விஷாலின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. அண்மையில் மகுடம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது ஆனால் இந்த முறை படத்தை விஷாலே நடித்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
மகுடம் படத்தின் இயக்கும் விஷால்
விஷாலின் 35 ஆவது படமாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 99 ஆவது படமாக மகுடம் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்கி வந்தார் . துஷாரா நாயகியாக நடிக்க , அஞ்சலி , தம்பி ராமையா , அர்ஜய் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. துறைமுகத்தை மையமாக வைத்து விறுவிறுப்பான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாக இருந்தது. இப்படத்திற்காக விஷால் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் ரவி அரசுடன் விஷாலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்ததோடு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்படவில்லை என்று தெரிவித்தது. இப்படியான நிலையில் மகுடம் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. தற்போது இப்படத்தில் விஷால் நடிப்பதோடு அவரே படத்தை இயக்கியும் வருவதாக தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விஷால் படத்தின் காட்சிகளை இயக்கும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன
மது போதையில் தகராறு செய்த இயக்குநர்
மகுடம் படத்தின் இயக்குநர் ரவிஅரசு படப்பிடிப்பின் போது தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வந்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் படப்பிடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. படப்பிடிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக விஷால் இயக்குநருக்கு ஆதரவாக பேசி படப்பிடிப்பை தொடர முயற்சித்ததாகவும் ஆனால் இயக்குநர் ரவி அரசு மது போதையில் தொடர்ந்து மற்ற கலைஞர்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி படத்தை தானே இயக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது