மறைந்த நடிகர் விஜயகாந்தின் கருணை உள்ளம் குறித்து நடிகர் வின்சென்ட் ராய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அழுத குழந்தை:


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவு பற்றியும், விஜயகாந்துடனான நினைவுகள் பற்றியும் திரை பிரபலங்கள் நேர்காணல்களில் பகிர்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் பிரபல நடிகர் வின்சென்ட் ராய் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 


அதில், “சத்ரியன், ஏழை ஜாதி உள்ளிட்ட ஏழு படங்களில் நான் கேப்டன் விஜயகாந்துடன் நடித்துள்ளேன்.  அவரின் ஏழை ஜாதி படத்தில் பல துணை நடிகர்களுடன் சைதாப்பேட்டை பாலத்தை இவர் கடந்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது மதிய வெயில் நேரம். ஷாட் போய் கொண்டிருக்கும் போது திடீரென நிறுத்த சொன்னார். என்னவென்று இயக்குநர் விசாரிக்கையில், விஜயகாந்துக்கு பின்னால் சில அடி தூரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு நிறுத்த சொன்னதாக தெரிய வந்தது.


நெகிழ வைத்த கேப்டன்:


உடனடியாக கூட்டத்தில் சென்று விசாரித்ததில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்த பெண்ணின் குழந்தை அது என தெரிய வந்தது. அவரை அழைத்து 'குழந்தையை வைத்துக்கொண்டு இந்த வெயிலில் ஏன் வந்தீர்கள்?' எனக்கேட்டார். '350 ரூபாய் தருவதாக சொன்னார்கள். அதனால் வந்தேன்' என்றார். உடனே மேனேஜரை அழைத்து 'இந்தம்மாவிற்கு இனி ஷூட்டிங் உள்ள நாட்களில் சம்பளமாக ரூபாய் 1,000 கொடுங்கள். வெயிலில் நடிக்க வைக்க வேண்டாம்' என கூறிவிட்டு தனது உதவியாளரை அழைத்தார்.


'கைப்பையில் என்ன இருக்கிறது? எனக்கேட்க 'உங்களுக்காக பிஸ்கட் மற்றும் ஜூஸ் வைத்திருக்கிறேன்' என்றார். 'அதை அந்தம்மா கிட்ட குடு. அவங்களை நிழல் இருக்கற இடம் பாத்து தங்க வை' என கூறிவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்தார். ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உடனே படப்பிடிப்பை நிறுத்தி, அதை சரி செய்துவிட்டுத்தான் மீண்டும் நடிப்பார். இப்படி சினிமாவில் எந்த ஹீரோவும் செய்வதில்லை” என தெரிவித்தார். 


ஒரே மாதிரியான உணவு:


மேலும், “பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் காபி, டீ போன்றவை வெவ்வேறு தரத்தில் இருக்கும். அதாவது பெரிய நடிகர்கள், இயக்குனருக்கு திக்கான பால் கலந்து தருவார்கள். அதன்பிறகு தண்ணீர் கலந்து அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு தரப்படும். கூட்டத்தில் நிற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு மிக சுமாரான முறையில் தான் வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒருநாள் கவனித்த கேப்டன் அதன்பிறகு நான்கு பெரிய  பாத்திரத்தை தன்னுடன் கொண்டுவர ஆரம்பித்தார்.


அதில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், காபி, டீ என்று எழுதப்பட்டதோடு அருகில் நிறைய டம்ளர்கள் அருகில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை கேட்டபோது 'தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் டீ, காபி எல்லாம் தரம் பிரிச்சி தர்றாங்க. அதான் நானே கொண்டு வந்துட்டேன். யாருக்கு எது விருப்பமோ அதை குடிக்கட்டும். இனிமே எல்லாருக்கும் ஒரே தரத்துலதான் குடிக்கணும்' என்றார். உணவில் கூட பாகுபாடு பார்க்க மாட்டார் விஜயகாந்த். அவர் எந்த தயாரிப்பாளரின் படத்தில் நடித்தாலும் இதே கண்டிஷன்தான். இதனால் செலவு அதிகமென தயாரிப்பாளர் நினைத்தால் தனது சம்பளத்தில் குறைத்துக்கொள்ளுமாறு கூறிவிடுவார். அதுதான் கேப்டன் விஜயகாந்த்” என வின்சென்ட் ராய் கூறியுள்ளார்.