'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் டாப்பா வருவான்' இந்த ஒரு டயலாக் சொன்னதும் அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு பிரபலமடைந்த ஒரு யதார்த்தமான படம் 'களவாணி'. அறிமுக இயக்குநர், பிரபலமாகாத ஹீரோ, புதுமுக ஹீரோயின் இப்படி எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாத ஒரு கூட்டணியில் உருவான படம் என்றாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ஜனரஞ்சகமான படமாக வெளியாகி இன்று வரை நினைவில் ஊஞ்சலாடும் ஒரு திரைப்படமாக வெற்றிபெற்ற களவாணி படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


 



பெரும்பாலும் கிராமிய பின்னணியில் உருவாகும் படங்களில் மதுரை மணம் வீசும். ஆனால் புதிதாக தஞ்சை மாவட்டத்தின் அழகை மிக அழகாக காட்சிப்படுத்தியது களவாணி படம். இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் தகராறை எப்படி ஒரு காதல் ஒன்று சேர்கிறது என்ற வழக்கமான ஒரு கதைக்களம் தான் என்றாலும் அதை மிகவும் சுவாரஸ்யமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அப்பாவிகளாக இருக்கும் ஆண்களை வம்புக்கு இழுப்பதும்வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றும் இளைஞர்களாக விமல் குரூப், , மகனுக்காக சப்போர்ட் செய்யும் அம்மாவாக சரண்யா, குடும்பத்திற்காக துபாய் சென்று சம்பாதித்து பணம் அனுப்பும் அப்பாவாக இளவரசு, கள்ளம் கபடம் இல்லாத அப்பாவியான ஹீரோயினாக ஓவியா, விமலிடம் சிக்கி தவிக்கும் கஞ்சா கருப்பு, கிராமங்களுக்கே உரித்தான பம்பு செட் குளியல், ரெக்கார்ட் டான்ஸ், மோட்டார் ரூம், கண்டிப்பான அப்பா இப்படி கிராம மக்களை அப்படியே பிரதிபலித்த படம். 


 



பள்ளிக்கு செல்லும் ஓவியாவை எந்நேரமும் சுற்றி வரும் விமல் ஒருவழியாக காதலில் விழ வைத்து எப்படி அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காதலில் வெற்றி பெற்று இரண்டு ஊருக்கு இடையில் இருந்த பகையை நட்பாக மாற்றுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்த எஸ்.எஸ்.குமரன் இசை படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது. நடிகர் விமல் இதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்ளின் கவனம் பெற்ற படமாக அமைந்தது. 


ஒரு சில படங்கள் மட்டுமே எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் புது பொலிவு மாறாமல் அதே பீல் கொடுக்கும் கல்ட் அந்தஸ்தை பெற்ற படங்களாக இருக்கும் . அந்த வகையை சேர்ந்த ஜாலியான படம் தான் 'களவாணி'.