தஞ்சாவூர்: பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக்கூடாது என்று வேளாண் உதவி இயக்குனர் மாலதி தெரிவித்தார்.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 2023-24ம் நிதி ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் 9 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு 100 மண் மாதிரிகள் வீதம் 9 கிராமங்களுக்கு 900 மண்மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது.


கலைஞர் திட்ட கிராமமான பண்ணவயல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூத்தாடிவயல் வருவாய் கிராமத்தில் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி மண் மாதிரி சேகரிப்பு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் மண் மாதிரி சேகரிப்பு குறித்து அவர் கூறியதாவது:


மண் மாதிரியானது நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் தான் எடுக்க வேண்டும். உரம் இட்டவுடன் மண் மாதிரிகள் எடுக்க கூடாது. பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக்கூடாது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரியானது ஆடுதுறை மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு மண்ணின் அமிலம், காரத்தன்மை, மண்ணில் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் அளவானது கண்டறியப்படுகிறது.


மண் பரிசோதனை அட்டை


பின்பு மண் பரிசோதனை அட்டையானது விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் உரச்செலவை குறைத்து அதிகமாக மகசூல் பெற முடியும். பயிர்களுக்கு தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிட முடியும். மண்ணின் தன்மைகேற்ப பயிரை தேர்ந்தெடுக்க முடியும் என்றார். 


பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் உடன் இருந்தனர். 




மண் பரிசோதனை எதற்காக?


மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் தோன்றும் கோளாறுகளை அவ்வப்போது அறிந்து சரி செய்யலாம். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து கொண்டு அதற்கேற்ப கூட குறைய உரமிடலாம். நிலத்தின் ரசாயனத் தன்மைக்கு ஏற்பவும் உரமிடலாம். எனவே உரச்செலவு குறையும். மண் பரிசோதனையினால் மண் வளம் காக்கப்படுகிறது. மண் பரிசோதனை செய்யவுள்ள நிலத்தின் பல பகுதிகளிலிருந்து மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.


ஒவ்வொரு மண் மாதிரியும் மண் கூறு சாகுபடி முறையில் ஒத்தாக உள்ள நிலப்பகுதியிலிருந்தே எடுக்க வேண்டும். அறுவடைக்குப்பின் அல்லது உரமிடுவதற்கு முன் தான் மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் வளம் ஒரே வயலிலும் கூட இடத்திற்கு இடம் மாறுபடுவதால் சுமார் 10 இடங்களிலிருந்து மண்மாதிரி எடுத்தல் வேண்டும். மண் மாதிரி எடுக்கும் இடத்தின் மேல் கிடக்கும் புல் பூண்டுகளையும் இலை, சருகு ஆகியவற்றையும் மேல் மண்ணையும் அகற்றி பின் மாதிரி எடுக்க வேண்டும்.


மண்வெட்டியினால் ஆங்கில எழுத்து வி வடிவமாக வெட்டி மாதிரிகளை எடுக்க வேண்டும். நெல் தானிய பயிர்களுக்கு 6 அங்குல ஆழத்திற்கும், பருத்தி, வாழை, கரும்புக்கு 9 அங்குல ஆழத்திற்கும், தென்னை பழ மரங்களுக்கு மூன்றிலிருந்து ஐந்து அடி ஆழத்திற்கும் வெட்டி மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுத்து நம் மண்ணின் வளத் தை அறிந்து உரமிட்டு விவசாயம் செய்து உரச் செலவை குறைத்து அதிக லாபம் பெறலாம்.