நடிகர் ரோபோ ஷங்கர் பலர் தங்கள் வாழ்க்கையில் மாறிப்போக ஒரு காரணமாக இருந்துள்ளார் என நடிகர் விமல் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்த படத்தில் ஹீரோயினாக மிஸ்ரா நரங் நடித்துள்ளார். மேலும் சதீஷ், சௌந்தர பாண்டியன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படம் விமல் நடிப்பில் திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. துடிக்கும் கரங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விமல், கேரியரில் தான் சந்தித்த இறக்கங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.
என்னிடம் நிறைய பேர், முன்னாடி எல்லாம் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருந்தது. இப்போதெல்லாம் படமே வரவில்லை என சொல்கிறார்கள். 2022ல் இருந்து ஆண்டவன் புண்ணியத்தில் நிறைய படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் தொடர்ந்து வரும். அதற்கு காரணம் இப்போதெல்லாம் எந்த கையெழுத்தும் நான் போடுவதில்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் தெரியாமல் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறேன்.
இவை எல்லாம் சேர்த்து வைத்ததால் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை படங்கள் வெளியாகாமல் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு வந்தது தான் ‘துடிக்கும் கரங்கள்’ படம். கொரோனா நேரத்தில் எனக்கு இப்படம் கைக்கொடுத்தது என சொல்லலாம். காரணம் இப்படத்தில் நடிப்பதை கேள்விப்பட்டு தான் விலங்கு வெப் சீரிஸூக்கு என்னை அணுகினார்கள். அது எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுவினர் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னிடம் நீங்க இந்த நிகழ்ச்சிக்கு 4 பேரை அழைத்து வாருங்கள் என சொன்னார். ஆனால் நான் கூப்பிட்டு வரவில்லை என்றால் ஒரு மாதிரி இருக்கும். உன் படத்தை பார்க்க முடியல என சொன்னார்கள், அப்படி இருக்கும்போது நான் கூப்பிட்டு யார் வரப்போகிறார்கள். அதனால் அதற்கான நேரத்தில் கூப்பிடலாம் என விட்டுவிட்டேன்.
ரோபோ ஷங்கர் 6 மாதமாக உடல்நிலை சரியில்லை என சொன்னார். நான் 3 மாசமா அவர் கிட்ட போன் கூட பேசவில்லை. அவரின் மனைவியிடம் மட்டும் விசாரித்துக் கொள்வேன். கவலைப்படாதீங்க மாமா,நீங்க ஒரு பல்கலைகழகம். பலபேர் உங்களை பார்த்து திருந்திட்டாங்க. யாரை கேட்டாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் ரோபோ ஷங்கர் தான். நானும் குடிச்சி 45 நாட்கள் ஆச்சு. நானும் மாறிட்டேன் என விமல் தெரிவித்துள்ளார்.