நடிகர் விக்ரம் நடிப்பில் அனைவரது பாராட்டையும் பெற்ற ‘தெய்வத்திருமகள்’ படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


மிகச்சிறந்த கலைஞர் விக்ரம் 


பொதுவாக சினிமாவில் எந்தவித கேரக்டர்கள் கொடுத்தாலும் அதனை வெகுசிறப்பாக செய்ய சிலரால் மட்டுமே முடியும். நடிப்பால் மட்டுமே ஒரு கேரக்டருக்கு சிறப்பு சேர்க்க முடியாது. உடலமைப்பு, வசன உச்சரிப்பு என பலவும் அதில் இடம் பெறும். அப்படி ஒரு கேரக்டரை நடிகர் விக்ரமிடம் கொடுத்தால் அல்வா சாப்பிடுகிற மாதிரி உடலை வருத்தி, நடிப்பை கொட்டி படம் பார்ப்பவர்களையும் ஒரு கணம் பிரமிக்க வைத்து விடுவார். 


அவரின் சினிமா கேரியரில் சேது, காசி, பிதாமகன், அந்நியன் போன்ற படங்களை தொடர்ந்து வெளியானது தான் ‘தெய்வத்திருமகள்’ படம். 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா, அமலா பால், அனுஷ்கா, நாசர், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


விக்ரம் மனதளவில் ஐந்து வயது குழந்தை, உடலளவில் 40 வயதுக்கு மேல். அவருக்கு மகள் நிலா தான் உலகம். மனைவியின் மறைவுக்குப் பிறகு மகள் தான் எல்லாம் என வாழ்ந்து வருகிறார். இப்படியான நிலையில் விக்ரம் மனைவியின் குடும்பம், வயதுக்கேற்ற மனவளர்ச்சி இல்லாத தந்தையிடம் தாயில்லா குழந்தை வளரக்கூடாது என வழக்கு தொடர்ந்து குழந்தையை பறிக்க முயல்கிறது. 


அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என தெரியாமல் சட்டப்போராட்டம் நடத்தும் விக்ரமும், அவருக்கு போதிய அனுபவமில்லாத வழக்கறிஞர் அனுஷ்கா எப்படி உதவுகிறார் என்பது இப்படத்தின் கதையாகும்.


தந்தை-மகள் பாசம் 


சினிமாவில் தந்தை - மகள் பாசத்தை முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்தாலும் இந்த படம் எப்போது பார்த்தாலும் வித்தியாசமாகவே தெரியும். ஐந்து வயது குழந்தை நிலா - மனதளவில் ஐந்து வயது கொண்டவராக விக்ரம் இடையேயான பாசப்பிணைப்பு அழகாக கையாளப்பட்டிருந்தது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் கோர்ட்டில் குழந்தை தொடர்பாக விவாதம் தீவிரமாக சென்று கொண்டிருக்க தொலைவில் இருந்து விக்ரமும், சாராவும் உணர்வுகளால் பேசிக் கொள்ளும் காட்சி எப்போது பார்த்தாலும் கண்ணீரை வரவழைக்கும். 


மேலும் மகளின் எதிர்கால நலனுக்காக தானாக முன்வந்து குழந்தையை சித்தி அமலாபாலிடம் ஒப்படைத்து செல்லும் விக்ரமின் முதிர்ச்சியான செயல் அனைவரையும் கைதட்டி பாராட்ட வைத்தது. 


காமெடியும் இசையும்


படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஜி.வி.பிரகாஷின் இசை அமைந்தது. விக்ரம் 2 பாடல்களை பாடியிருந்தார். சைந்தவி பாடிய ‘விழிகளில் ஒரு வானவில்’ மெலோடி பாடல்களில் பலரின் ஃபேவரைட் ஆக இன்றளவும் உள்ளது. 


இதேபோல் ஜூனியர் வக்கீலாக வரும் சந்தானத்தின் காமெடி அல்டிமேட்டாக அமைந்தது. குறிப்பாக நீதித்துறையில் சாட்சியை சேர்க்கவும், நீதியை வளைக்கவும் அவர் முயற்சி செய்யும் காட்சிகள் என்றென்றும் கலகலப்பை ஏற்படுத்தும்.


பிற தகவல்கள் 


முதலில் அனுஷ்கா கேரக்டரில் அணுகப்பட்டவர் நடிகை வித்யா பாலன். அதேபோல் அமலா பால் கேரக்டரில்  மீரா ஜாஸ்மினை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. மேலும் படத்திற்கு முதலில் தெய்வ மகன் என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து ‘தெய்வதிருமகன்’ என மாற்றப்பட்டது. இதற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க ‘தெய்வ திருமகள்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்டு பிறவி குறைபாடால் ஒருவரை பரிதாபமாக பார்க்கச் சொல்லாமல், அவர்களுக்குள் இருக்கும் சொல்ல முடியாத அன்பை பற்றி சொல்லி அப்ளாஸ் அள்ளியது ‘தெய்வத்திருமகன்’.