போண்டா மணி


வடிவேலு, விவேக் போன்ற பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகர் போண்டா மணி நேற்று இரவு தனது 60 வயதில் காலமானார். கிட்னி செயலிழந்து தொடர் சிகிச்சைப் பெற்று வந்த அவர்  இன்று உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் திரையில் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மற்றும் தே.மு. தி . க  நிறுவனர் விஜயகாந்த் போண்டா மணியின் இறப்பிற்கு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜயகாந்த் சார்பில் போண்டா மணி குடும்பத்தினருக்கு உதவி தொகை வழங்கி உள்ளார் விஜயகாந்த்.


அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்


“ பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று விஜயகாந்தின் எக்ஸ் தளத்தில் அவர் சார்பில்  பதிவிடப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது போண்டா மணி அவர்களின் குடும்பத்தினரை விஜயகாந்த் சார்பில், மறைந்த நடிகர் போண்டா மணி மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரபாம்பு சுப்புராஜ், தேமுதிக அனகை முருகேசன் ஆகியோர் உதவி தொகை கொடுத்து, ஆறுதல் கூறி, இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




போண்டா மணி


இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த போண்டா மணி கே பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை  நடிகர்களாக இருந்த நடிகர் வடிவேலு, விவேக் ஆகியவர்களுடன் துணை நடிகராக நடித்த போண்ட மணி பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். கடந்த ஓராண்டாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த போண்டா மணிக்கு அவரது நிலை பற்றி இணையத்தில் அறிய வந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான உதவிகளை துரிதப்படுத்தினார். மேலும் விஜய் சேதுபதி தொடங்கி திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு உதவிகள் செய்தனர். 


தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த போண்டா மணி  நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்தார். பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூரில் இருக்கும் அவருடைய வீட்டில் இருக்கும் போது போண்டா மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக, போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து போண்டா மணி உடல் அவரது வீட்டில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.