நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார்கள் என கொண்டாடப்படும் விஜய்- அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக மோதுவது தான்.
விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரும், ஜனவரி 4 ஆம் தேதி வாரிசு படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் நாளை (ஜனவரி 7) அல்லது ஜனவரி 8 ஆம் தேதி தான் முன்பதிவு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்கள் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ரூ.200, ரூ.250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 7 காட்சிகள் வரை திரையிடப்படவுள்ள நிலையில், துணிவு படத்திற்கு டிக்கெட் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினரை கவரும் வாரிசு
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, விடிவி கணேஷ், யோகிபாபு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. வாரிசு படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
முன்னதாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பக்கா பேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ள வாரிசு நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் படத்தின் ட்ரெய்லரை பார்த்த இணையவாசிகள் சிலர், வாரிசு தெலுங்கு படத்தின் சாயல் போன்று இருப்பதாகவும், பார்த்து பார்த்து சலித்துப்போன கதையை வம்சி கையில் எடுத்திருப்பதாகவும் குறை கூறி வருகின்றனர். எது எப்படியோ வாரிசு எப்படி இருக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.